×

மழை பெய்ய வேண்டி 51 கரும்பன்றிகளை பலியிட்டு சுடலை மாடனுக்கு படையல்: சாயல்குடி அருகே விநோத வழிபாடு


சாயல்குடி: மழை பெய்ய வேண்டி சாயல்குடி அருகே, 51 கரும்பன்றிகளை பலியிட்டு, சுடலை மாடன் சுவாமிக்கு விநோத வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு முத்துப்பேச்சி அம்மன், சுடலை மாடசாமி, காட்டேறும் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் கடற்கரை சென்று குடங்களில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து முத்து பேச்சியம்மன், சுடலை மாடசாமி, கட்டேறும் பெருமாள் சாமி விக்கிரங்களுக்கு தீர்த்தக் குடத்தில் கொண்டு வரப்பட்ட புனித கும்ப நீர், மஞ்சள், பால், தயிர், திரவியப் பொடி, பச்சரிசி மாவு, சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் விபூதி, குங்குமம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு பூஜைகள், காவு கொடுத்தல் ஆகியவை நடந்தன. பிறகு பருவ மழை நன்றாக பெய்து, பனை மரம், விவசாயத் தொழில் சிறக்க வேண்டி சுடலை மாடனுக்கு 51 கரும்பன்றிகள் பலியிடப்பட்டன. பன்றிக்கறிகளை பொதுவாக சமைத்து, புத்தரிசி (சிவப்பு அரிசி) சாதத்துடன் மூலவருக்கு படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த விருந்தில் வெட்டுக்காடு, சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

The post மழை பெய்ய வேண்டி 51 கரும்பன்றிகளை பலியிட்டு சுடலை மாடனுக்கு படையல்: சாயல்குடி அருகே விநோத வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sudala Matan ,Sayalkudi ,Chudala Madan Swami ,Vinotha ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...