×

மதநல்லிணக்க பூக்குழி திருவிழா தீக்கங்குகளை பெண்கள் தலையில் கொட்டி வழிபாடு

சாயல்குடி : சாயல்குடி அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். நேர்த்திக்கடனாக பெண்கள் தலையில் தீக்கங்குகள் கொட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் பகுதியில் 313 வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய பெண்மணி மாமூநாச்சி, இவரது மகன்கள் அசன்,குசன் ஆகியோர் வாழ்ந்து வந்துள்ளனர்.

பெரியகுளம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் அசன், குசன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவர்களை கிராமத்தை சேர்ந்த சிலர் உயிரோடு தீயிட்டு கொளுத்தி விட்டனர். அப்போது அங்கு வந்த தாய் மாமூநாச்சி எனது மகன்கள் செய்யாத தவறுக்காக தவறான தண்டனை கொடுத்து விட்டீர்கள். இந்தாண்டு முதல் இப்பகுதி பல இன்னல்களை சந்திக்கும் எனக் கூறி, தானும் மகன்களுடன் சேர்ந்து தீயில் பாய்ந்து இறந்து போனார்.

இச்சம்பவம் முஸ்லீம் மக்களின் புனித பிறை தெரியும் மொகரம் நாளன்று நடந்துள்ளது. அந்த வருடம் முதல் அப்பகுதியில் விவசாயம் பொய்த்து, பசி, பட்டினி மற்றும் காலரா, பேதி, அம்மை போன்ற நோய் நொடிகள் ஏற்பட்டு பலர் இறந்துள்ளனர். இதனால் கிராமமக்கள் மனவேதனை அடைந்தனர். மாமூநாச்சி கிராம பெரியவர் கனவில் கூறியபடி, தவறான தீர்ப்பால் இறந்தவர்களுக்கு பூக்குழி திருவிழா கொண்டாட முடிவு செய்து பல வருடங்களாக கொண்டாடி வருகின்றனர்.

இங்குள்ள இடத்தில் வெள்ளியிலான பிறை ஒன்றை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். வெள்ளி கருத்தால் விவசாயம் பொய்த்து போகும். பளபளத்தால் விவசாயம் செழிக்கும் என தற்போது வரை நம்பப்பட்டு வருகிறது. இறந்தவர்களுக்கு இந்து, முஸ்லீம் முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு, நேர்த்திக்கடனாக பொதுமக்கள் பூக்குழி இறங்குகின்றனர். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி விநோதமாக வழிபட்டு வருகின்றனர்.

அதன்படி மொகரம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் இந்துக்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். மொகரம் நாளான நேற்று முன்தினம் இரவு சப்பரம் ஊர்வலம், இறுதி சடங்கு முறைகள் மற்றும் மவூலீது ஓதப்பட்டு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. நேற்று அதிகாலையில் நீராடி 10க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். பெண்கள் தலையில் தீக்கங்குகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இத்திருவிழாவில் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த இந்து, முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டனர். எவ்வித பேதமின்றி ஒற்றுமையுடன் பல வருடங்களாக கொண்டாடி வருவது ராமநாதபுரம் மாவட்டத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

The post மதநல்லிணக்க பூக்குழி திருவிழா தீக்கங்குகளை பெண்கள் தலையில் கொட்டி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Religious Reconciliation Pukkuzhi Festival Worship ,Sayalgudi ,Sayalkudi ,Mogaram festival ,Periyakulam ,Sayalkudi, Ramanathapuram district ,Mamoonachi ,
× RELATED பள்ளி மேலாண்மை குழு கூட்டம்