×

தெளிவு பெறு ஓம்: ஏன் கோயில் மூல மூர்த்தி சிலைகள் கருங்கல்லில் செய்யப்படுகின்றன?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தெளிவு பெறு ஓம்

?கோயில் வாசலிலேயே செருப்பை கழட்டி விட்டு போவது சரியா? யாராவது திருடிவிட்டால்?
– மாலதி, குளித்தலை.

பதில்: கோயில் வாசலில் நீங்கள் செருப்பை மட்டும் கழட்டி விட்டு போகாதீர்கள். கூடவே மனதிற்குள் இருக்கும் அழுக்கு, கோபம், போட்டி, பொறாமை போன்ற அனைத்து கெட்ட குணங்களையும் கழற்றி வைத்துவிட்டு செல்லுங்கள். அதை யாராவது திருடிவிட்டு போகட்டும்.

?வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்ந்த பாடம் எது?
– மதுசூதனன், திருத்துரைப்பூண்டி.

பதில்: விவேகானந்தர் இதற்கு சரியான விடையை அளித்திருக்கிறார். “செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை, அக்கறையை அந்த செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும்” என்பது என் வாழ்வில் நான் கற்று உயர்ந்த பாடங்களில் ஒன்று என்பது விவேகானந்தர் வாக்கு. அதை நாமும் பின்பற்றலாம். வெற்றி என்பது முக்கியம்தான். ஆனால், அதை பெறுகின்ற வழி அதைவிட முக்கியம். தவறான வழியில் பெற்ற வெற்றியும் தோல்வியே. சரியான வழியில் நடந்து பெற்ற தோல்வியும். வெற்றியே.

?சுமுகமான வாழ்க்கைக்கு எது முக்கியம்?
– கஜபிரியா, வந்தவாசி.

பதில்: நம்பிக்கைதான் முக்கியம். இந்த நம்பிக்கையை எக்காரணத்தை முன்னிட்டும் இழந்து விடக்கூடாது. இன்றைக்கு நிறைய தற்கொலைகள் நடக்கின்றன. மனதில் இனம் புரியா அச்சமும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையும்தான் இதற்குக் காரணங்கள். நாம் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும். ஒன்று நாமே நம்பிக்கையுடன் (self-confidence) இருக்க வேண்டும். இரண்டாவதாக, மற்றவர்களுக்கும் நாம் நம்பிக்கையைத் தர வேண்டும். பூரண நம்பிக்கை இல்லாமல் ஒரு அடிகூட நம்மால் எடுத்து வைக்க முடியாது. நீங்கள் இங்கிருந்து வீடு திரும்புகிறீர்கள் என்றால், வீடு அதே இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்தான் செல்கிறீர்கள். உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, உள்ளத்தில் வீடு, நாம் விட்டு வந்த இடத்திலேயே இருக்கும் என்கின்ற நம்பிக்கை பூரணமாக இருக்கிறது. இந்த நிஷ்டைதான் நம் உள்ளே நேர்மறையாக (positive effect) வேலை செய்கின்றது.

?தானம் தர்மம் எளிய விளக்கம் தேவை?
– வாமனதேவன், திருச்செங்கோடு.

பதில்: இதற்கு பல விளக்கங்கள் உண்டு. இருப்பினும் அதில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்கும்போது, ஒருவருக்கு வழங்குவது தர்மம். கேட்காதபோது, அவரின் தேவை அறிந்து வழங்குவது தானம். நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக, நல்ல காரியங்களுக்கு நாம் தருவதை ‘தானம்’ என்று சொல்லலாம். நம்மைவிட வசதி குறைந்தவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை ‘தர்மம்’ என்று சொல்லலாம். இன்னொரு கோணத்தில், ‘தானம்’ என்ற சொல் பொதுவாகவே நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது. `தர்மம்’ என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல், நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல், தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம். சில குறிப்பிட்ட சமயங்களில், விரதமோ, யாகமோ பூர்த்தியடைய தானம் செய்வது விதிக்கப்பட்டிருக்கிறது. தர்மம் என்பது எப்போதும் செய்ய வேண்டியது.

?இறைவனை அடைய அடியார்கள் துணை வேண்டுமா? நாமாக நேரடியாக சென்று அடைய முடியாதா?
– ஜனனி வெங்கட், சென்னை.

பதில்: பசுமாடு நம்முடையதாக இருந்தாலும், அது தானாகப் பால் கறப்பதில்லை. கன்றுக் குட்டி அருகில் இருந்தால்தான் கறக்கும். அதுபோல, சில அடியார்களின் துணையில்லாமல் இறையருளைப் பெறுவது கடினம். ராமாயணத்தில் அசோகவனத்தில் சீதை, `ராமானுஜம் லட்சுமண பூர்வஜா’ என்று சொல்லுகின்றாள். ராமனும் லட்சுமணனும் என்று சொல்லலாம். காட்டில் இருவரையும் பிரிந்த சீதைக்கு, அவர்கள் இரண்டு பேரும் மானைத்தேடி போனபின் சந்தித்து கொண்டார்களா என்பதும் தெரியாது. ஆனாலும், லட்சுமணனைச் சொல்லி லட்சுமணனுக்கு முன்பிருந்த ராமன் என்று சொல்கிறாள். என்ன காரணம் என்றால், அடியாரை முன்னிட்டுச் சொல்ல வேண்டும், பலிக்கும்.

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து, என்பது பாசுரம். யானையின் மீது ஏறவிரும்புபவர்கள், யானைப் பாகனுடைய அனுமதி கொண்டு புகவேண்டுமா போலே, அடியார்களின் துணை கொண்டே எம்பெருமானைப் பணிதல் வேண்டுமென்பது மரபு.

?அவதாரத்தை எப்படிப் புரிந்து கொள்வது?
– ஹரிபிரசாத், தஞ்சை.

பதில்: அவதாரம் என்றால் மேலே இருந்து கீழே இறங்கி வருவது என்று ஒரு பொருள். இதை இன்னொரு கோணத்திலும் நாம் விளங்கிக் கொள்ளலாம். இயற்கையின் ஒழுங்குக்கு இடையூறு நேரிடும் பொழுது, இயற்கை தன் உள்ளிருந்து ஒரு பேராற்றலை தோற்றுவித்து இடையூறு செய்யும் அம்சத்தை நீக்கிவிடும். இதுவும் அவதாரத்தின் வெளிப்பாடுதான்.

?நம்மாழ்வார் தமிழின் சிறப்பு என்ன?
– கமலம், முசிறி.

பதில்: நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்களை எழுதினார். அந்த நான்கு பிரபந்தங்களும் தமிழ் பற்று ஆன்மிக பற்று உடைய ஒவ்வொருவருக்கும் ஒரு அற்புதம் என்று சொல்லலாம். கடவுள் மறுப்பு கொள்கையை உடைய பாரதிதாசன், தமிழ் நன்றாகக் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அவர் தன் மாணாக்கர்களுக்கு திருவாய்மொழியின் முதல் திருவாய்மொழியான “உயர்வற உயர்நலம் உடையவன்” என்கின்ற பாடல்களைச் சொல்லி அற்புதமான இலக்கண குறிப்புகளைக் கொடுப்பாராம்.

`மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர்
யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ
கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே’

– என்கிற பாசுரத்தின் நயத்தை அவர் மிகவும் ரசிப்பாராம். (குறிப்பு உதவி: திரு சித்தன், புதுவை) அதைப் போலவே பிரபலமான திரைப்பட பாடலாசிரியர் வாலி ஒருமுறை சொன்னார். “என்னைக் கவர்ந்த ஆழ்வார் நம்மாழ்வார். என் தமிழ் துருப்பிடிக்கும் போதெல்லாம் நம்மாழ்வார் திருவாய்மொழியில் சாணைப் பிடித்துக் கொள்கிறேன்” என்றார்.

?மனிதர்களில் எத்தனை வகை உண்டு?
– சிவக்குமார், மடிப்பாக்கம்.

பதில்: ஆண்டாள், திருப்பாவையிலே `ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஒரு பாசுரம் பாடி இருக்கிறார். இதற்கு உரையாசிரியர்கள் உரை எழுதுகின்ற பொழுது மனிதர்களை பல்வேறு விதமாக வகைப்படுத்திச் சொல்கிறார்கள். 1. உத்தமன், 2. மத்திமன், 3. அதமன், 4. அதமாஅதமன். பிறருக்காக தன்னை அழிய விடுபவன் உத்தமன். தன் பெருமைகளைக் கூட பிறர் வாழ்வுக்காக விட்டுத் தருபவன் உத்தவன். அதாவது, பிறருக்காகவே வாழ்பவன் உத்தமன்.

தனக்காகவும் வாழ்ந்து, பிறருக்காகவும் உதவுபவன் மத்திமன்.
தனக்காக மட்டுமே, பிறரைப் பற்றிக்
கவலைப்படாமல் வாழ்பவன் அதமன்.
தன்னுடைய வாழ்வுக்காக பிறரை அழிக்கவும் தயங்காதவன் அதமா அதமன்.

? ஏன் கோயில் மூல மூர்த்தி சிலைகள் கருங்கல்லில் செய்யப்படுகின்றன?
– ரேவதி முத்துசுவாமி, நாகர்கோவில்.

பதில்: உலோகத்தின் ஆற்றலைவிட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகம். குறிப்பாக, கருங்கல் எந்த சக்தியையும் தன்வசப்படுத்திக் கொள்ளும் தன்மை உடையது. கருங்கல்லானது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து வகையான பஞ்சபூதத்தின் தன்மைகளைக் கொண்டுள்ளது. கருங்கல்லில் தண்ணீர் உள்ளதால் அது குளிர்ச்சியான நிலையிலேயே இருக்கிறது. நிலம் என்பது கல்லுக்குள் இருக்கிறது. கருங்கல்லில் நெருப்பும் உண்டு.

அதனால்தான் ஒன்றுடன் ஒன்று உரசும்போது தீ பற்றுகிறது. கல்லில் காற்று உள்ளதால்தான் கருங்கல் பாறைகளுக்கு இடையில் தேரைகள் வாழ்கின்றன. ‘‘கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் புல்லுணவே தந்து போற்றும் தயாபரன்’’ என்பார்கள். ஆகாயத்தைப் போலவே வெளியில் உள்ள சத்தங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் திறன் கல்லுக்குள் உண்டு. கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட கோயிலில் அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும்போது, பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கிறது. அத்தகைய மூர்த்தியை நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகுவதுடன், நம் வாழ்வில் நல்ல பலன்களும் கிடைக்கிறது. நம் பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்கிறது.

? எதிலும் வெற்றி பெற சிறந்த ஒரு பாசுரம் சொல்லுங்கள்?
– பிரசன்ன வெங்கடேஷ், துறையூர்.

பதில்: ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்கள் பாடல்களில் கடைசிப் பாடலில் பலன் என்ன என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அந்த அடைப்படையில்,

`ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ, திசை
வாழி யெழத்தண்டும் வாளு மெழ, அண்டம்
மோழை யெழமுடி பாத மெழ, அப்பன்
ஊழி யெழவுல கங்கொண்ட வாறே’

– என்ற பாசுரத்தை பாராயணம் செய்ய, எதிலும் வெற்றி கிடைக்கும். இதை ஆழ்வார் உறுதிப்படுத்துகிறார்.

`குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,
ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,
நன்றி புனைந்தஒ ராயிரத் துள்ளிவை,
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே’

இப்பாசுரங்களை மனம் ஒன்றி ஓதுபவர்களுக்கு ‘‘வென்றி தரும்பத்து’’என்கிறார்.

?கலக்கம் என்பது? கலங்காதிருக்க என்ன செய்ய வேண்டும்? கலக்கம் இல்லாதவர் எப்படி இருப்பார்கள்?
– கே.ரங்கநாதன், ராமநாதபுரம்.

பதில்: மனம் குழம்பினால், நேர் சிந்தனை இல்லாவிட்டால், கலக்கம் வருகிறது. சிந்தனை குழம்பிவிட்டால் நமக்கு பகுத்தறியும் ஆற்றல் போய்விடுகிறது. அச்சம் வந்து விடுகிறது. இந்த கலக்கம் போக வேண்டும் என்றால், மனம் இறைவனை நம்பவேண்டும். அப்படி நம்பியவர்கள், அச்சமின்றி இருப்பார்கள். தெளிவோடு இருப்பார்கள். மன நிம்மதியோடு இருப்பார்கள்.

`என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன் செயலே என்று
உணரப்பெற்றேன்,
இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை,
பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ
இங்ஙனே வந்து மூண்டதுவே’.

– என்ற பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். கவலையோ அச்சமோ வராது.

? எப்போதோ செய்த செயலுக்கு பின்னால் தண்டனை பெறுவது நியாயமாக இருக்குமா?
– ஆர்.முருகானந்தம், பெரம்பலூர்.

பதில்: இந்த கதை உங்கள் கேள்விக்கு பதில் தரும்.ஒரு பலே திருடன். வயது முதிர்ச்சியால் திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டான். அமைதியாக தனது வீட்டில் நாட்களை நகர்த்தத் தொடங்கினான். தான் திருடி வைத்திருக்கும் பொற்காசுகளை வீட்டுக் கொல்லைப்புறத்தில் புதைத்து வைத்திருந்தான். தேவைப்படும் போது சிறிது சிறிதாக வெளியே எடுத்து செலவு செய்வான். இந்த விஷயம் அரசனுக்குத் தெரியவந்தது. திருடன் கைது செய்யப்பட்டான். புதைக்கப்பட்டிருந்த பொற்காசுகளும் மீட்கப்பட்டது. திருடன் பேசினான்.

“அரசே! மூன்று தலைமுறைக்கு முன்பே திருட்டுத் தொழிலை நிறுத்திவிட்டேன். இப்போது மீட்டெடுத்த பொற்காசுகள் எல்லாமே என் இளமைக் காலத்தில் திருடியவை. இவை அனைத்தையும் செய்தது என் இளமைப் பருவம் இந்தத் திருட்டுகளைச் செய்தது நான் அல்ல. என் இளமை. இப்போது முதுமையில் இருக்கிறேன். எந்த தவறும் செய்யாத முதுமையை எப்படி தண்டிப்பீர்கள்?”

“நீ என்ன சொல்கிறாய்? எனக்குப் புரியவில்லையே!’’ என்றான் அரசன்.

“அரசே! உங்களுக்கு புரியம்படி சொல்கிறேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது என்னை எல்லோரும் கொஞ்சுவார்கள். இப்போது முதுமைப் பருவத்தில் இருக்கிறேன். இப்போது என்னை யாரும் கொஞ்சுவதில்லை. குழந்தையாக இருந்தபோது என்னைக் கொஞ்சியவர்கள் இப்போதும் என்னை கொஞ்சுவார்களேயானால், இளமையில் செய்த குற்றத்திற்கு இப்போதும் தண்டனை கொடுக்கலாம். குழந்தைப் பருவத்தில் செய்ததை இப்போது யாரும் செய்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அப்படித்தான் இளமையில் செய்த குற்றத்துக்கு,
முதுமையில் தண்டிக்கப்படுவதில்லை.”

அரசனுக்கு எதுவும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த சாதுவிடம் ரகசியமாகப் பேசினார். சாது பேசத் தொடங்கினார்.“அரசே! நீங்கள் தினமும் இளநீர் குடிக்கிறீர்கள். இளமையில் நீங்கள் விதைத்த தென்னை இன்று அதற்கான பலனைக் கொடுக்கிறது. விதைக்கப்பட்டது இளமையில். அனுபவிப்பது முதுமையில். இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், இளமையில் செய்த குற்றத்துக்கு, முதுமையில் தண்டனை அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்!

இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது என்று நம்பப்படும் போது, இளமையில் செய்த தவறுக்கு முதுமையில் தண்டனை அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அநீதி வேகமாக ஓடும் போது, தர்மம் பின் தொடர்வதை அது கவனிப்பதில்லை. ஆய்ந்து ஓய்ந்து அமரும் போது, கட்டுப்பாட்டை தர்மம் எடுத்துக்கொள்ளும். உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும். அதை செய்வதற்கு யாராவது ஒருவர் கருவியாக வேண்டும்.

இப்போது நீங்கள் கருவியாக இருக்கிறீர்கள். அதர்மத்தின்படி எல்லா தவறுகளையும் செய்தவனை, தர்மத்தின்படி மட்டுமே தண்டிப்பேன் என்று ஒரு அரசன் காத்திருப்பான் என்றால், அந்த காத்திருத்தல் அந்த அதர்மவாதிக்கு சாதகமாகத்தான் முடியும்” என்று சொல்லிவிட்டு அமைதியானார். தெளிவுபெற்ற அரசன் திருடனுக்கு தண்டனை அளித்தான்.

தொகுப்பு: பாரதிநாதன்

The post தெளிவு பெறு ஓம்: ஏன் கோயில் மூல மூர்த்தி சிலைகள் கருங்கல்லில் செய்யப்படுகின்றன? appeared first on Dinakaran.

Tags : Om ,
× RELATED ஓம் நமச்சிவாயா பக்தி கோஷம் முழங்க...