×

26ம் தேதி சிறப்பு மற்றும் 7.5% இட ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது; சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 2023-24ம் ஆண்டு கல்வியாண்டுக்கான தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை வெளியிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிமணியனிடம் இருந்து பெற்றுக்கொண்டார், 2023-24ம் தேதி ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாட்டில் உள்ள 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 786 இடங்களும், ஒரு அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மற்றும் 100 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 361 இடங்களிலும், ஒரு அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 46 இடங்களும், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஒன்றிலும் மற்றும் 11 தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 822 இடங்கள் என 2015 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன.

மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்திய மருத்துவ முறை மட்டும் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் 49 இடங்கள் ஒன்றிய அரசால் நிரப்பப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு ஒதுக்கிட்டு இடங்களுக்கு 2,695 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களின் தகுதியான விண்ணப்பங்களாக 2,530 தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 596 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களின் 556 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 1,040 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில் 968 மாணவர்களின் விண்ணப்பம் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கு 942 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 913 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வில் பொது பிரிவு மாணவர்கள் 137 மதிப்பெண்கள் இதர பிரிவு மாணவர்கள் தகுதி மதிப்பெண் 107 எடுத்திருந்தாலும் கலந்தாய்வு கலந்து கொள்ள முடியும். அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி வைஷாலி முதல் இடத்தையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவன் அரிஹரன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 92 இடங்களில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவன் திருமலை முதலிடம் பெற்றுள்ளார்.
சிறப்பு பிரிவினர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. அரசு ஒதுக்கீடு மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 31ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதி நிர்வாக ஒதுக்கீட்டிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் சித்தா, ஆயிர்வேதம், யுனானி போன்றவற்றின் கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் மிகப்பெரிய ஆயிர்வேதா கல்லூரி கட்டும் பணி தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான இடமும் பார்க்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் போன்று சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றிய அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் அதனை திருச்சியில் அமைவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலை கழகம் ஒன்று தமிழ்நாட்டில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டமற்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதற்கான இடமும் மாதவரம் பால் பண்ணை அருகே 25 ஏக்கர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி சிறப்பு கலந்தாய்வு தொடங்குகிறது. அதற்கடுத்து தொடர்ந்து ஒவ்வொரு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெறும். வரும் நவம்பர் மாதம் ஆயுஷ் படிப்பிற்கான பாடம் தொடங்கும். ஆயுஷ் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீடு முடிந்த பின்னரே மாநில கலந்தாய்வு நடத்த வேண்டியுள்ளதால் ஆயுஷ் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த தாமதம் ஏற்படுகிறது. நடப்பாண்டில் இதுவரை 5,242 பேருக்கு டெங்கு பாதிப்பும், 4 இறப்புகளும் பதிவாகியுள்ளது. திருச்செங்கோடு குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மருத்துவ துறை மற்றும் காவல்துறை இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் கிட்னி உள்ளிட்ட உறுப்புகள் விற்பனை செய்துள்ளதாகவும் அறியப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். மருத்துவர்களுக்கான காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. வரும் டிசம்பர் மாதத்திற்குள் சென்னையில் 1,021 மருத்துவ காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post 26ம் தேதி சிறப்பு மற்றும் 7.5% இட ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது; சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Siddha ,Minister ,M.Subramanian ,CHENNAI ,Tamil Nadu ,Unani ,M. Subramanian ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...