×

மரியாள் எனும் மாபெரும் ஆளுமை

கிறிஸ்துவம் காட்டும் பாதை

லூக்கா 1:46-56

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாள் போற்றுதலுக்குரியவர். இயேசுகிறிஸ்து எனும் உலக மீட்பரை அவர் தன் வயிற்றில் சுமந்து ஆளாக்கினார் என்ற காரணத்துக்காக மட்டுமல்ல, அவருடைய இயல்புகளுக்காகவும், அவருடைய தனிப் பட்ட ஆளுமைக்காகவும், அவர் போற்றுதற்குரியவர் ஆகிறார். ஒரு பெண் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு அறிவுடனும், துணிவுடன் இருந்து புரட்சிகர செயல்பாட்டாளராக இருந்தார் என்பது நம் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்குகிறது.

அன்னை மரியாள், ஒரு இளம் வயது பெண். திருமணமாகாதவர். அவருடைய பெற்றோர் சகோதர சகோதரிகள் பற்றிய விவரம் இல்லை. அவர் அவரது உறவினரின் ஆதரவில் வளர்ந்து, தனது தனித்தன்மையை வளர்த்துக் கொண்ட பெண் என்பது நமக்குத் தெரிய வருகிறது. இதை அவருடைய கருவுற்றல் நிகழ்ச்சியிலே காண முடிகிறது. இக்காலகட்டத்தில் திருமணம் ஆகாத ஒரு பெண், ஒரு ஆணின் துணை இன்றி கருவுற்றாள் என்பதை ஏற்பது கடினம்.

ஆனால், சமயத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. இதுபோன்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் எதற்காக பயன்படுகின்றன, விடுதலைக்காகவா அல்லது அடிமைத்தனத்திற்காகவா என்ற கேள்வியை எழுப்பி அத்தகைய நம்பிக்கையை தொடர்ந்து ஏற்பதா அல்லது அதற்கு முக்கியத்துவம் தராமல் இருந்து விடுவதா என்று தீர்மானிக்க வேண்டும்.

கன்னியின் வயிற்றில் தூய ஆவியரின் துணையோடு கருவுற்று பிறந்த இயேசு பிற்காலத்தில் உலக மீட்பராக வலம் வந்து நம்பிக்கை இழந்திருந்த மக்களுக்கு நம்பிக்கையும், துணிவையும் அளித்ததோடு அனைவருக்கும் அன்பையும் சமாதானத்தின் நீதியையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் விட்டு சென்றுள்ளார் என்பதில் அவரது பிறப்பு நமக்கு ஏற்புடையதாகிறது.

இயேசுவின் தாயார் எனும் பெயரும் புகழும் அவருக்கு கிடைத்தாலும் இயேசுவை மரியாளின் மகன் என்று அழைக்கும் அனைவருக்கும் அன்னை மரியாள் தனித்த அடையாளம் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கபிரியேல் எனும் வானதூதர் மரியாளிடம் வாழ்த்துக்கூறி “இதோ கருவுற்று ஒரு பாலகனை பெறுவீர், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்” எனும் வார்த்தையை அருளினார். வான தூதரின் வார்த்தையை உடனடியாக ஏற்காமல் அவரிடம் “இது எப்படி நிகழும் நான் கன்னி ஆயிற்றே” என்று கேள்வியை எழுப்பி, அதற்காக பதிலையும் பெற்ற பின்பு ‘‘நான் ஆண்டவரின் அடிமை உன் சொற்படியே நிகழட்டும்” என்றார்.

முதலாவதாகத் திருமணம் ஆகாத ஒரு பெண் எந்த ஆணின் துணை இன்றி வயிற்றில் கருவை சுமக்க முடியும் தானே என்கின்றார். தன் வீட்டில் பெரியவர்கள் அல்லது வேண்டப் பட்டவர்கள் அல்ல மூத்த பெண்கள் யாரிடமும் அவர் அனுமதி கேட்கவில்லை. தன் வாழ்க்கை பற்றிய முடிவை தானே எடுக்கின்றார். குறிப்பாக, எந்த ஆணின் அனுமதிக்கும் அவர் காத்திருக்கவில்லை. இரண்டாவதாக, திருமணம் ஆகாத ஒரு பெண் கருவுற்று வீதியில் நடமாடினால் ஊரார் என்ன சொல்வார்கள், எத்தகைய விசாரணைக்கு உட்படுவார்கள் என்பதை நன்கு அறிந்ததோடு அதை எதிர்கொண்டும் துணிவு கொண்டவராக மரியாள் இருந்தார்.

மூன்றாவதாக, உலகு உறவினரான வெளிச்சத்தை சந்தித்தபோது அவர் பாடிய பாடலில் புரட்சிகரமான சமூக மாற்றம் பற்றிய கருத்துக்கள் இருப்பதை காண முடிகிறது. 1. சாமுவேல் 2. ஆம் அதிகாரத்தில் காணப்படும் அன்னாளின் பாடலை தழுவியதாக இருந்த போதும் யூத மக்களிடையே எத்தனையோ பாடல்கள் இருக்கையில் மரியாள் பாடலை தமக்கு ஏற்றி பாடியது மூலம் அவர் நம்மை ஒடுக்கப் பட்டோரின் பிரதிநிதியாக உணர்ந்தார் என்று புரிந்து கொள்ளலாம்.

எப்படி இப்படிப்பட்ட புரட்சிகர எண்ணம் கொண்ட மரியாள், தமது மகன் இயேசுவை எத்தகைய உணர்வுகள் ஊட்டி வளர்த்திருப்பார் என்று நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். அன்னை மரியாள் ஒரு மாபெரும் ஆளுமை என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு ஆகும்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post மரியாள் எனும் மாபெரும் ஆளுமை appeared first on Dinakaran.

Tags : Mary ,Lord ,Jesus Christ ,
× RELATED முருக வழிபாடு