×

சந்திர பிரியங்கா திடீர் பதவி நீக்கம் பாஜ நழுவிக் கொண்டதால் முதல்வர் ரங்கசாமிக்கு தலைவலி

புதுச்சேரி, அக் 17: சந்திர பிரியங்கா திடீரென அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் நாடாளுமன்ற தேர்தலில் தலித் ஓட்டுக்கள் பாதிக்கப்படும் என பாஜ நழுவிக் கொண்டது. இது முதல்வர் ரங்கசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தனித்தொகுதியில் வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா(34), என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அமைச்சரவையில் போக்குவரத்து துறையை கவனித்தார். கடந்த 8ம்தேதி கவர்னர் தமிழிசையை சந்தித்த முதல்வர் ரங்காமி, தனது அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை திடீரென டிஸ்மிஸ் செய்து கடிதம் கொடுத்தார். இவ்விஷயம் வெளியே கசிந்ததால், 9ம்தேதி சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கும், கவர்னருக்கும் கடிதம் கொடுத்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்த கவர்னர் தமிழிசை, சந்திரபிரியங்காவை அமைச்சரவையில் இருந்து நீக்க முதல்வர் கடிதம் கொடுத்ததாகவும், இதனை ‘மத்திய உள்துறை அமைச்சகம் வழியாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினார். அவர் ராஜினாமா செய்தாரா? டிஸ்மிஸ் செய்யப்பட்டரா? என்ற சர்ச்சை நீடிக்கிறது.இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் ரங்கசாமியோ இதுவரை மவுனமாக இருந்து வருகிறார். அதேபோல் அமைச்சரிடம் விளக்கம்பெற பலமுறை செல்போனில் முயன்றும் முடியவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் தனது கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரி வந்திருந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், இவ்விவகாரம் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மாறாக அமைச்சர் பதவி நீக்கம் விவகாரம் உட்கட்சி பிரச்னை, அவர்களது கட்சி தலைவர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென கூறி நழுவி விட்டார்.

இந்நிலையில், சந்திர பிரியங்கா விவகாரத்தில் அமைச்சர் பதவியை முதல்வர் ‘டிஸ்மிஸ்’ செய்து விட்டதாக கவர்னர், சபாநாயகர் வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். இருந்தும், அந்த பரிந்துரையை ஒன்றிய அரசு, முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜ போட்டியிட முடிவு செய்துள்ளது. இதில் தாழ்த்ப்பட்ட ஓட்டுகள், பாதிக்கப்படும் என்பதால் இவ்விவகாரத்தில் பாஜ, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. மேலும் இவ்விவகாரத்தை ரங்கசாமி பக்கமே பாஜ திருப்பி விட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், தெலங்கானாவில் ஒருவாரமாக முகாமிட்டுள்ள கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி திரும்பியதும் அவரை இவ்விவகாரம் தொடர்பாக சந்திக்க முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.

The post சந்திர பிரியங்கா திடீர் பதவி நீக்கம் பாஜ நழுவிக் கொண்டதால் முதல்வர் ரங்கசாமிக்கு தலைவலி appeared first on Dinakaran.

Tags : Chandra Priyanka ,Chief Minister ,Rangaswamy ,BJP ,Puducherry ,Dalit ,Rangasamy ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி