×

சட்டீஸ்கர் யாருக்கு? நீயா, நானா சண்டையில் காங்கிரஸ், பா.ஜனதா

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2 கட்டமாக நடக்கும் மாநிலம் சட்டீஸ்கர். நக்சல் பாதிப்பு அதிகம் என்பதால் நவ.7ல் 20 தொகுதிகளுக்கும், நவ.17ல் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்தியபிரதேசத்தில் இருந்து 2000ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தனியாக பிரித்து சட்டீஸ்கர் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. பழம்பெருமை மிக்க சட்டீஸ்கர் பகுதி பழங்காலத்தில் தட்சண கோசலா என்று அழைக்கப்பட்டது. இங்கு 36 பழங்கால கோட்டைகள் உள்ளன. அதை கொண்டு தான் சட்டீஸ்கர் என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். சட்டீஸ் என்றால் 36 என்றும், கர் என்றால் கோட்டை என்றும் பொருள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் இதை ஏற்கவில்லை. அங்கு 36 கோட்டைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். இது ஒருபுறம் விவாதமாக இருந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக வனப்பகுதி கொண்ட 3வது மாநிலம். மபி, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தெலங்கானா மாநிலங்களுடன் வனப்பகுதியை பகிர்ந்து கொண்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் அதிக அளவு தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயம் உள்ளன. இங்குள்ள அச்சனக்மர்-அமர்கண்டக் உயிரியல் காப்பகம் 3.83 லட்சம் ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது. அதோடு முக்கியமாக வனப்பகுதியை பயன்படுத்தி நக்சல் பாதிப்பும் இங்கு அதிகம்.

7 மாநிலங்களை எல்லையாக கொண்ட சிறப்பு பெற்றது சட்டீஸ்கர். வடக்கே உபியும், வடமேற்கே மபியும், தென்மேற்கே மகாராஷ்டிராவும், வடகிழக்கே ஜார்க்கண்ட் மாநிலமும், கிழக்கே ஒடிசாவும், தெற்கே ஆந்திரா மற்றும் தெலங்கானாவும் எல்லை மாநிலங்களாக உள்ளன. சட்டீஸ்கரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் மலைப்பாங்கானவை. மத்திய பகுதி சமவெளி. கிழக்கு ஹைலேண்ட்ஸ் பகுதியில் 44 சதவீதம் இலையுதிர் காடுகள் உள்ளன. வடக்கில் பெரிய இந்தோ-கங்கை சமவெளி உள்ளது. இங்கு கங்கையின் கிளை நதியான ரிஹாண்ட் நதி கடந்து செல்கிறது.

சத்புரா மலைத்தொடரின் கிழக்கு முனையும், சோட்டா நாக்பூர் பீடபூமியின் மேற்கு விளிம்பும் மகாநதியை இந்தோ-கங்கை சமவெளியில் இருந்து பிரித்து கிழக்கு-மேற்கு மலைப்பகுதியை உருவாக்கி உள்ளன. இதனால் சட்டீஸ்கர் மாநிலம் ஒரு கடல் குதிரை வடிவமைப்பில் அமைந்துள்ளது. சட்டீஸ்கரின் மத்தியப்குதி மகாநதி மற்றும் துணை நதிகளின் பாய்ச்சலால் வளமையாக உள்ளது. இதில் சிவநாத் ஆறு 300 கிமீ தூரம் ஓடுகிறது. இந்த பகுதியில் நெல் சாகுபடி அதிகம். தெற்கு பகுதியான தக்காண பீடபூமியில் கோதாவரி நதி மற்றும் அதன் துணை நதியான இந்திராவதி நதி ஓடுகிறது. இருப்பினும் மகாநதி தான் சட்டீஸ்கரின் முக்கிய ஜீவநதி.

நாட்டிலேயே அதிக இயற்கை வளம் உள்ள மாநிலம். நிலக்கரி அதிகம் கிடைக்கும் 3வது மாநிலம். மின்சாரம், நிலக்கரி, இரும்பு ஆகியவற்றை நாட்டின் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்யும் திறன் பெற்றது. எக்கு ஆலை சட்டீஸ்கரின் மிகப்பெரிய கனரக தொழில். இங்கு 100க்கும் மேற்பட்ட எக்கு உருக்கு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த சிமெண்ட் உற்பத்தியில் 50 சதவீதம் சட்டீஸ்கரில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிக நிலக்கரி சுரங்கம், இரும்புத்தாது உற்பத்தியில் 3வது இடம், தகரம் உற்பத்தியில் முதலிடம் சட்டீஸ்கருக்குத்தான்.

இங்கு முக்கியத் தொழில் விவசாயம் மற்றும் தொழிற்துறைதான். 48.28 லட்சம் ஹெக்டேர் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக பாரம்பரிய விவசாயம் கொண்ட மாநிலம். அரிசி, சோளம், தினை வகைகள், பருப்பு வகைகள், நிலக்கடலை, சோயா பீன்ஸ், சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. மத்திய இந்தியாவின் அரிசி கிண்ணம் என்று சட்டீஸ்கர் அழைக்கப்படுகிறது. மொத்தத்தில் பணம் கொழிக்கும் மாநிலம். ஆனால் மக்கள் ஏழைகள். இதை வைத்துதான் அரசியல் நடக்கிறது. சட்டீஸ்கரின் முதல் முதல்வர் அஜித்ஜோகி. காங்கிரஸ்காரர். 3 ஆண்டுகள் இருந்தார்.

அதன் பின் பா.ஜ ராஜ்ஜியம். 2003 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் 10 நாட்கள் ராமன்சிங் முதல்வராக இருந்தார். ஆனால் 2018 தேர்தலில் அவரது சாம்ராஜ்ஜியத்தை காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்தது. காங்கிரசுக்கு 68 தொகுதிகள், பா.ஜவுக்கு 15 தொகுதிகள், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கூட்டணிக்கு 5 தொகுதிகள் கிடைத்தன. தற்போதைய முதல்வர் பூபேஸ் பாகேல். இந்த முறை சட்டீஸ்கரை கைப்பற்றி விட வேண்டும் என்பது பா.ஜவின் விருப்பம். விட்டுவிடக்கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு. காரணம் அங்குள்ள இயற்கை வளம். முடிவு டிசம்பர் 3ம் தேதி தெரியும்.

* விறுவிறு பா.ஜ
சட்டீஸ்கரில் இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று பா.ஜ விறுவிறுப்பாக உள்ளது. மொத்தம் 90 தொகுதிகளில் 85 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். முன்னாள் முதல்வர் ராமன்சிங் உள்பட 11 எம்எல்ஏக்கு இந்த முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. 2018ல் தோல்வி அடைந்த 13 வேட்பாளர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பா.ஜவில் இணைந்த நடிகர் அனுஜ் சர்மா பா.ஜ சார்பில் ராய்ப்பூர் மாவட்டம் தார்சிவ்வா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர் ரேணுகா சிங் உள்பட 3 எம்பிக்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு
முதல்கட்டம் 2ம் கட்டம்
மனுத்தாக்கல் அக்.13 அக்.21
கடைசிநாள் அக்.20 அக்.30
பரிசீலனை அக்.21 அக்.31
வாபஸ் பெற அக்.23 நவ.2
ஓட்டுப்பதிவு நவ.7 நவ.17
ஓட்டு எண்ணிக்கை டிச.3 டிச.3

சட்டீஸ்கர் ஒரு கழுகுபார்வை
மாவட்டங்கள் 33
எம்பி தொகுதிகள் 11
மாநிலங்களவை எம்பி 5
சட்ட பேரவை பதவிக்காலம் 3.1.2024
மொத்த தொகுதிகள் 90
பொதுத்தொகுதிகள் 51
எஸ்சி தொகுதிகள் 10
எஸ்டி தொகுதிகள் 20
மொத்த வாக்காளர்கள் 2.03 கோடி
ஆண் வாக்காளர்கள் 1.01 கோடி
பெண் வாக்காளர்கள் 1.02 கோடி
முதல் வாக்காளர்கள் 7.23 லட்சம்
மாற்றுத்திறனாளிகள் 1.6 லட்சம்
80+வாக்காளர்கள் 1.86 லட்சம்
100+ வயது வாக்காளர்கள் 2,462
பழங்குடியினர் 1,15,070
மொத்த வாக்குச்சாவடிகள் 24,109

பொருள் சட்டீஸ்கர் இந்தியா
பரப்பளவு 1,35,192 ச.கிமீ 32.87 லட்சம் ச.கிமீ
மக்கள் தொகை 2,94,36,231 142 கோடி
பெண்/ஆண் விகிதம் 991/1000 943/1000
மொத்த உற்பத்தி ரூ.5.09 லட்சம் கோடி ரூ.2,73,07,750 கோடி
தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,52,348 ரூ.1,70,620
வேலைவாய்ப்பின்மை 0.6% 9.8%
ஓராண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.31,968 கோடி ரூ.13,24,985 கோடி

The post சட்டீஸ்கர் யாருக்கு? நீயா, நானா சண்டையில் காங்கிரஸ், பா.ஜனதா appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Nana ,Congress ,BJP ,Naxal ,Janata Party ,
× RELATED சட்டீஸ்கரில் பயங்கரம் மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலி