×

உடுமலை அருகே சோகம் பயணிகள் ஓய்வெடுக்கும் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

உடுமலை: உடுமலை அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த சாவடி என அழைக்கப்படும் பயணிகள் ஓய்வெடுக்கும் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகினர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொழுமத்தை சேர்ந்தவர்கள் முரளிராஜா (35), மணிகண்டன் (28), கவுதம் (29). கூலி தொழிலாளர்கள். இதில் முரளிராஜாவுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கொழுமத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில் சாவடி என அழைக்கப்படும் பயணிகள் ஓய்வெடுக்கும் கட்டிடம் உள்ளது. 40 ஆண்டு பழமையான இந்த கட்டிடம் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் ஆனது.

முன்பகுதி வராண்டாவின் மேல் கான்கிரீட் தளம் உள்ளது. நேற்று காலை முரளி ராஜா, மணிகண்டன், கவுதம் ஆகியோர் அந்த கட்டிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சுவர்கள் நனைந்து பலமிழந்துள்ளது. காலை 8 மணியளவில் திடீரென கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. மூவரும் வெளியே ஓட முயன்றனர். அதற்குள் கான்கிரீட் இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர். தகவலறிந்து குமரலிங்கம் போலீசாரும், உடுமலை தீயணைப்பு துறையினரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கிரேன் மூலம் இடிபாடுகளை அகற்றி மூவரின் சடலங்களையும் மீட்டனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட எஸ்பி சாமிநாதன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிர் தப்பிய மாணவிகள்: பயணிகள் ஓய்வு எடுக்கும் கட்டிடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த நடராஜன் என்பவர் கூறுகையில், “நானும் அந்த கட்டிடத்தில்தான் அமர்ந்திருந்தேன்.

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பலரும் பேருந்துக்காக அந்த கட்டிடத்தில் ஒதுங்கி நின்றனர். அவர்கள் பேருந்தில் ஏறிச்சென்றதும், நானும் அங்கிருந்து புறப்பட்டேன். அடுத்த ஒரு நிமிடத்துக்குள் கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்துவிட்டது. பேருந்து வர சற்று தாமதமாகி இருந்தால், மாணவ, மாணவிகளும் பலியாகி இருப்பார்கள்” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

* உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி – முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கொழுமம் கிராமம், கொழுமம் – பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இடிந்து விழுந்து, முரளி ராஜா (35), கவுதம் (29) மற்றும் மணிகண்டன் (28) ஆகிய மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உடுமலை அருகே சோகம் பயணிகள் ஓய்வெடுக்கும் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sogam ,Udumalai ,Savadi ,
× RELATED வளைகாப்பு நிகழ்ச்சிக்காக...