×

திருப்பதியில் பிரம்மோற்சவ 2ம் நாள்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2ம் நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருடாந்திர பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவம் என 2 பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 18ம்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி 26ம்தேதி தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து நவராத்திரி பிரமோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டது.

தொடர்ந்து தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க திருச்சி விகை வாகனத்தில் எழுந்தருளி மேள, தாளங்கள் முழங்க யானைகள் அணிவகுத்து செல்ல மாடவீதியில் உலா வந்தார்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத ஏழுமலையான் மாட வீதியில் பவனி நடைபெற்றது. ஆனால் இந்த பிரம்மோற்சவத்தில் ெகாடியேற்றம் கிடையாது. 2ம் நாளான இன்று காலை ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் சின்ன ேசஷ வாகனத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வீதி உலாவின்போது 4 மாடவீதியில் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள் செய்தும் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வேடம் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இன்றிரவு அன்ன வாகன உற்சவத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

ரூ2.72 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,659 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 21,304 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹2.72 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் பிரம்மோற்சவ 2ம் நாள்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Brahmotsavam ,Tirupati ,Malayappa Swami Bhavani ,Tirumala ,Navaratri Brahmotsavam ,Tirupati Eyumalayan Temple ,Malayappa ,Swami ,Bhavani ,Small Sesha Vahanam ,Swami Bhavani ,
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி...