![]()
புதுடெல்லி: அணுசக்தி சாதனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருட்களின் கடத்தலை தடுக்க, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளின் 8 தரைவழி எல்லைப் பகுதியில் கதிர்வீச்சு கண்டறியும் கருவி (ஆர்டிஇ) விரைவில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணுசக்தி சாதனங்கள் மற்றும் கதிரியக்க பரவல் சாதனங்கள் தயாரிக்க பயன்படும் கதிரியக்க பொருட்கள் எல்லை வழியாக அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதை கண்டறிவது இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருந்து வருகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண சர்வதேச எல்லையை கடக்கும் பகுதிகளில் கதிர்வீச்சு கண்டறியும் கருவி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கருவி, அட்டாரி (பாகிஸ்தான் எல்லை), பெட்ராபோல், அகர்தலா, டாவ்கி மற்றும் சுதர்கண்டி (வங்கதேச எல்லை), ரக்சால் மற்றும் ஜோக்பானி (நேபாள எல்லை), மோரே (மியான்மர் எல்லை) ஆகிய 8 பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் மற்றும் சர்வதேச எல்லைகளில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியை கடக்கும் சரக்கு லாரிகளை ஆய்வு செய்து கதிரியக்க பொருட்களின் கடத்தலை எளிதில் தடுக்க முடியும்.
The post பாக். உள்ளிட்ட அண்டை நாடுகளின் 8 எல்லை பகுதியில் கதிர்வீச்சு கண்டறியும் கருவி: ஒன்றிய அரசு அமைக்கிறது appeared first on Dinakaran.
