×

சுங்கத்துறை எழுத்துத்தேர்வில் முறைகேடு வடமாநில இளைஞர்கள் 29 பேர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு: ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் கைது, தேர்வுக்குழு அதிகாரிகள் விசாரணை

சென்னை: சுங்கத்துறை எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 29 தேர்வர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனினும், அவர்களை ேபாலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர். எனினும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வழக்கில் மட்டும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜாஜி சாலையில் தலைமை சுங்க அலுவலகம் உள்ளது. இங்கு கேன்டீன் உதவியாளர், கிளார்க், சமையலர், எழுத்தர், கார் ஓட்டுநர்கள் என 17 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, சுங்கத்துறை இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான வயது வரம்பு 25, 10ம் வகுப்பு, டிப்ளமோ, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒருமணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் காலை சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் பலத்த சோதனைகளுக்கு பிறகு, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், எழுத்து தேர்வு துவங்கிய 15 நிமிடத்தில் சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, தேர்வர்களை அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்தனர்.

அதில், காதில் புளூடூத், உடலில் எலக்ட்ரானிக் டிவைஸ் போன்ற சாதனங்களை பொருத்தி இருந்ததை சுங்கத்துறை தேர்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஒவ்வொருவராக சோதனை செய்ததில், அரியானா உள்பட வடமாநிலத்தை சேர்ந்த 30 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதும், சிங்க் என்ற செயலி மூலம் தொடர்பு கொண்டு இவர்கள் கேள்விகளை அனுப்பி விடைகளை பெற்று தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. புளூடூத், எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு, சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் இருந்து கேள்விக்கான பதிலை அளித்தவர்கள் யார் என்பதை அறிய, சுங்கத்துறை சார்பில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி பூக்கடை துணை ஆணையர் ஸ்ரேயா குப்தா உத்தரவின்பெயரில் துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார், வடக்கு கடற்கரை ஆய்வாளர் ராஜாசிங் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், 30 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சர்வின் (22) என்பவர் தேர்வு எழுத வரவில்லை. இவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தனது உறவினர் சவன் (22) என்பவர் ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோவை மாற்றி தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 29 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த மோசடியில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என தேர்வு குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுங்கத்துறை எழுத்துத்தேர்வில் முறைகேடு வடமாநில இளைஞர்கள் 29 பேர் சொந்த ஜாமீனில் விடுவிப்பு: ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் கைது, தேர்வுக்குழு அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Northern ,North ,Dinakaraan ,
× RELATED வேலை தேடி தமிழ்நாட்டுக்கு...