×

தெலங்கானாவில் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: ரூ.400க்கு எரிவாயு சிலிண்டர் முதல்வர் கேசிஆர் அறிவிப்பு

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, ஆளும் பிஆர்எஸ்(பாரதிய ராஷ்டிரிய சமிதி) கட்சி 115 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று வேட்பாளர்களுக்கு கட்சி சின்னத்துக்கான படிவத்தை வழங்கினார். இதனை தொடர்ந்து, பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அவர் பேசியதாவது, “வறுமை கோட்டுக்குகீழ் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேசிஆர் காப்பீடு பெயரில் எல்ஐசி மூலம் ரூ.5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். மூத்த குடிமக்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 ஆண்டுகளில் ரூ.5,000 வரை உயர்த்தப்படும். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தகுதியான ஏழை பெண்களுக்கு ரூ.400 காஸ் சிலிண்டர் வழங்கப்படும். உயர் சாதி ஏழைகளுக்கு ஒரு தொகுதிக்கு ஒரு பள்ளி அமைக்கப்படும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, சித்திபேட் மாவட்டம் ஹூசனாபாத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

* காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்த தெலங்கானா முதல்வர்

தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்கரே கூறுகையில், ‘சோனியா காந்தி தலைமையில் நடந்த பொது கூட்டத்தில் ஆட்சிக்கு வந்தால் 6 வாக்குறுதிகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை முதல்வர் சந்திரசேகரராவ் காப்பியடித்து தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி செயல்படுத்தும் திட்டங்களை மட்டும் அறிவிக்கும். தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல்காந்தி, பிரியங்கா வருகிற 18,19,20 ஆகிய தேதிகளில் வந்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். மேலும், பஸ் யாத்திரை தொடங்கப்பட உள்ளது. கரீம்நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச உள்ளார்’ என்றார்.

The post தெலங்கானாவில் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை: ரூ.400க்கு எரிவாயு சிலிண்டர் முதல்வர் கேசிஆர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PRS ,CM KCR ,Tirumala ,Telangana ,assembly election ,Bharatiya Rashtriya Samithi ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...