×
Saravana Stores

50 சவரன் கொள்ளை வழக்கில் 30 ஆண்டாக தலைமறைவான 2 கொள்ளையர்கள் சிக்கினர்: தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் சுற்றிவளைப்பு

சென்னை: கொள்ளை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவான இருந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் இப்ராகிம். கடந்த 1993ம் ஆண்டு, இவரது வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், இப்ராகிமை வெட்டி, அவரது வீட்டிலிருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முத்து, தீர்த்தமலை, மகேந்திரன், சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தீர்த்தமலை மற்றும் முத்து ஆகியோர் உயிரிழந்தனர். ஜாமீனில் வெளியே வந்த மகேந்திரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 30 ஆண்டுகளாக தலைமறைவாகினர். இதனையடுத்து இருவரையும் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. போலீசார் விசாரணையில், தலைமறைவாக இருந்த இவர்கள், நெருங்கிய உறவினர்களுடன் கூட தொடர்பில் இல்லாதது தெரிந்தது. மேலும், கொள்ளை நடந்தபோது வாலிபர்களாக இருந்த அந்த இருவர் தற்போது 50 வயதை கடந்ததால், வாலிப வயது புகைப்படங்களை வைத்து, அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தீவிர தேடலுக்கு பிறகு, பெரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த மகேந்திரன் (53) மற்றும் சக்திவேல் (52) ஆகிய இருவரையும் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது, மகேந்திரன் பெரும்பாக்கத்தில் லிப்ட் ஆப்ரேட்டராகவும், சக்திவேல் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 50 சவரன் கொள்ளை வழக்கில் 30 ஆண்டாக தலைமறைவான 2 கொள்ளையர்கள் சிக்கினர்: தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Chennai ,
× RELATED சவரன் ரூ. 59 ஆயிரத்தை தொட்டது தங்கம்...