×

அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா சமூகநீதி, சுயமரியாதையை இந்தியா முழுவதும் பரவ செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன் வழியில், லட்சிய முழக்கத்தை தொடர்ந்து எழுப்புவோம். சமூகநீதியையும் சுயமரியாதையும் இந்தியா முழுமைக்கும் பரவிடச் செய்வோம் என்று திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் பேசியதாவது: 1940ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பெரியார் இந்த இயக்கத்தை வளர்ப்பது சிறு வயது இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்டார்.

அத்தகைய இளைய தீரர்களில் ஒருவர்தான் பழையகோட்டை, இளைய பட்டக்காரர் என்று சொல்லப்படும் அர்ச்சுனன். தந்தை பெரியாரின் கொள்கைகளால் இருபது வயதிலேயே ஈர்க்கப்பட்டு, அவரது தளபதியாகத் திகழ்ந்தவர். தமிழ்நாடெங்கும் பயணித்து பெரியாரின் பகுத்தறிவு-சுயமரியாதை கருத்துகளை முழங்கியவர். பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அர்ச்சுனன் முன்வைத்த கருத்துகள், சிந்தனையைத் தூண்டி, செயலாற்றலுக்குத் துணை நின்றன. திராவிடர் கழகத்திற்கு ஒரு கொடி வேண்டும் எனப் பெரியார் திட்டமிட்டார்.

அதற்கான வடிவமைப்பின்போதுதான், கருப்பு நிறத்திற்கு நடுவே சிவப்பு வட்டம் வரைவதற்கு மை தேவைப்பட்டபோது, சிவப்பு மை இல்லாததால், தலைவர் கலைஞர் தன் விரலில் குண்டூசியால் குத்தி, பொங்கி வந்த ரத்தத்தைக் கொண்டு சிவப்பு வட்டத்தை வரைந்தார். கொள்கையாளரின் குருதியில் வடிவமைக்கப்பட்டது திராவிடர் கழகக் கொடி, சமுதாய இருளை அகற்றி, புரட்சி வெளிச்சம் பரவவேண்டும் என்ற அடையாளமான அந்தக் கொடியை பல ஊர்களிலும் ஏற்றியவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் அர்ச்சுனன்.

கொடியேற்றி வைத்து ஆற்றிய வீர உரைகள், அன்றைய இளைஞர்களின் நெஞ்சில் அறிவுச் சுடராக ஒளிர்ந்தது. இலட்சியங்களை உயர்த்திப் பிடித்த இலட்சியவாதியாம் அர்ச்சுனனை மறக்காமல், அவரது புகழினைப் போற்றும் திராவிடர் கழகத்தினருக்கும் என் பாராட்டுகள். எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே! எங்கள் மாநிலத்தில் திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களில் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இலட்சிய முழக்கத்தை தொடர்ந்து எழுப்புவோம். சமூகநீதியையும் சுயமரியாதையும் இந்தியா முழுமைக்கும் பரவிடச் செய்வோம்.

The post அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழா சமூகநீதி, சுயமரியாதையை இந்தியா முழுவதும் பரவ செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Arjunan Manradiar Centenary ,India ,Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,Archunan Ilaiaya Pattakkar Archunan ,Old Kottayam ,Arjunan Monradiar Centenary ,Dinakaran ,
× RELATED முதல்வர் பிறந்தநாள்...