×

குழப்பங்கள் நீக்கும் நாமம்

முக சந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷிகா

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

இதற்கு முன்னே சொல்லப்பட்ட நாமங்களை கவனியுங்கள். ஏனெனில், முதலில் அம்பிகையின் கேச பாரம், ஜடைகள், கிரீடம், நெற்றி இப்போது முகம் முழுவதும்… இந்த முகம் முழுவதிலுமே பார்க்கும்போது நெற்றியிலுள்ள அந்த கஸ்தூரி திலகம் முழு சந்திரனின் கருமையான புள்ளிபோல் இருந்தாலும் அது சந்திரனுக்கு அழகூட்டுவதுபோல் அம்பிகையின் நெற்றியில் உள்ள அந்த திலகம் விளங்குகின்றது.

இதற்கு நேரடியான பொருள் என்னவெனில், நீங்கள் பூமியிலிருந்து சந்திரனை பார்க்கிறீர்கள். சந்திரனை பார்க்கும்போது அதன் மத்தியில் கருமை நிறமுள்ள பகுதியை பார்க்கின்றோம். இது சந்திரன் எனும் தேவனின் முகத்தில் கஸ்தூரி திலகம் போல் அழகூட்டுகின்றது. இந்த கருமையானது சந்திர தேவனுக்கு களங்கம்போலும் இருக்கின்றது. இங்கு களங்கம் என்கிற கருப்பு நிறமானதை இலக்கிய அழகாக கொள்ள வேண்டும்.

தொலைதூரத்திலிருந்து பார்த்தால் இந்த கருமையானது மான் போன்றிருப்பதால் சந்திரனுக்கு மிருகாங்கன் என்றும், முயல் குட்டி போல் இருப்பதால் சசாங்கன் என்றும் இரு பெயர்கள் உள்ளன. இன்னும் பார்த்தால் ம்ருக நாபி விசேஷிகா என்றால். ம்ருக நாபி என்கிற மானிடமிருந்து பெறப்பட்ட கஸ்தூரி என்கிற வாசனை திரவியத்தையே பொட்டாக வைத்திருக்கும் அம்பாளின் முகம் எப்படி களங்கமாகும். வசின்யாதி வாக் தேவதைகள் அம்பிகையை வர்ணிக்கும்போது, அம்பிகையின் முகம் சந்திரன்தான், அந்த சந்திரனில் களங்கம் இருக்கின்றது.

சந்திரனை முகமாகக் கொண்டால் இந்த சிறு கஸ்தூரி பொட்டானது களங்கமல்ல. அழகான பொட்டுதான் என்று கொள்ள வேண்டும். இந்த கஸ்தூரி திலகம் களங்கம் மாதிரி தெரிகின்றது. சரி, இதற்குள் உள்ள சூட்சுமமான பொருளை அதாவது அத்யாத்மமான விஷயத்தை பார்க்க வேண்டும். இதற்கு முந்தின நாமத்தில் அஷ்டமி சந்திர விப்ராஜ தளக ஸ்தல சோபிதா எனும் பெயரில் அஷ்டமி என்பது மத்தியில் உள்ளதால் அது சமநிலையை குறிக்கின்றது.

அந்த சமநிலை என்பது ஸ்தித பிரக்ஞனின் லட்சணத்தை உணர்த்துகின்றது. ஆத்ம தரிசனம் பெறும்போது அந்த ஞானியின் நிலையானது ஸ்தித பிரக்ஞன் என்கிற அனைத்து இருமைகளை கடந்து விடுகின்றான். அப்படி அந்த நிலையில் இருக்கும்போது என்ன விசேஷமெனில், அதாவது ம்ருக நாபி விசேஷகா… என்று சொல்லப்படுகின்றது. அந்த கஸ்தூரி திலகம் இங்கு அம்பிகைக்கு அலங்காரமாகி விட்டது. எது சந்திரனிடம் இருக்கும்போது களங்கமாக இருந்ததோ அது அம்பிகையினுடைய முகத்தில் இருக்கும்போது அலங்கார வஸ்துவாகத்தான் இருக்கின்றது.

கொஞ்சம் ஆழமாகப் போய் பார்ப்போம் வாருங்கள்.

இப்போது நீங்கள் சரீரத்தோடு இருக்கிறீர்கள். உங்களுக்கு உடல், மனம், புத்தி என்று எல்லாவித விஷயங்களோடும் கலந்து கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். நான் சுவாமிநாதன். நான் மீனாட்சி… என்று சொல்லும்போது நான் என்பதே உங்களின் உண்மையான உணர்வு. அந்த உணர்வோடு உடல், மனம், புத்தி என்று அனைத்தும் சேரும்போது அந்த வடிவத்திற்கு பெயர் கொடுக்கிறீர்கள். அதாவது அந்த நானுடன் சேர்ந்து இந்த மூன்றும் சேருகின்றதே இதற்குத்தான் உபாதி என்று பெயர். இந்த உபாதியோடு நாம் இப்போது நம்மை இணைத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த இணைத்துக் கொண்டிருப்பது என்பது தற்காலிகமாகும்.

ஏனெனில், இந்த உடம்பு போய்விடும். மனமும் போய்விடும். நாமமும் மறந்து விடும். இப்படி அனைத்தும் போய்விட்ட பிறகு மிஞ்சும் அந்த நான் யார் எனில் அந்த நானே அந்த பரமாத்ம வஸ்துவான அம்பிகையாவாள். இந்த உபாதியோடு இருக்கும்போது அங்கு உங்களுக்கு எல்லாவித பிரச்னைகளும் ஏற்படுகின்றன. உடல், மனம் என்று ஏகப்பட்ட குழப்பங்கள்….

இப்போது கவனியுங்கள். இந்த உபாதி என்கிற சிறிய களங்கமானது ஒரு ஞானி தான் ஞானம் அடையும்போது அவன் சரீரம் உபாதி எல்லாவற்றையும் தாண்டிய ஞானத்தில் நின்று விடுகின்றான். ஆனாலும், அந்த நிலையை நமக்குச் சொல்வதற்காக அந்த சரீரம் தாங்கி ஏதோ ஒரு பெயரோடு வருகின்றான். இப்போது நீங்கள் எவ்வளவு ஞானியை குருவை பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களைப்போலவே ஒரு மனதைக் கொண்டு பேசுகின்றார்கள். மனதை உபயோகிக்கிறார்கள்.

உங்களைப்போலவே எல்லா காரியத்தையும் செய்கிறார்கள். அதாவது உபாதியோடு சேர்ந்து இருப்பதுபோல் காட்டுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. அவர்கள் அப்படி இருப்பதில்லை. அந்த உபாதியானது அம்பிகைக்கு கஸ்தூரி பொட்டுபோல இருப்பதுபோல, அந்த ஞானிக்கு அந்த உடல் அழகாக உள்ளது. அந்த மனமானது நம்முடைய மனம்போல் குழப்பமற்று விளங்குகின்றது. தெள்ளிய நீரோடைப்போல இருக்கின்றது.

அந்த ஞானியின் முகத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கவே விரும்புகின்றோம். ஏன் புகைப்படமாகவோ ஓவியமாகவோ வைத்துக் கொள்கிறோம். அது சாதாரண உபாதிதானே என்று இல்லாமல். அந்த ஞானம் தாங்கி வந்த உடலானது சரீரமானது அப்பேற்ற ஞானத்தை அலங்கரிக்கும் திலகம்போல இங்கு மிளிர்வதை பாருங்கள். இப்போது அது சாதாரண சரீரமல்ல. ஞான சரீரம். அதனால் திருமூலர் திருமந்திரத்தில் குருவைப்பற்றி சொல்லும்போது…

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திரு உரு சிந்தித்தல்தானே.

நமக்கும் ஞானிக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். இந்த உடலை நாம் என கருதிக் கொண்டிருக்கின்றோம். அதாவது இந்த உடலே நான் என்று நினைப்பதால் ஞானத்தை அதாவது உண்மையில் இந்த நான் என்பதை அறியாமல் எப்படி இந்த மனதை உடலை கையாளுவது என்று தெரியாமல் களங்கமான பொட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். உடலால் மனமும் நோயும் குழப்பமும் என்று சர்வ பிரச்னைகளோடும் அலைகழிப்புகளோடு இருக்கின்றோம்.

ஆனால், ஞானியோ தன்னை ஞானமாக கொண்டிருப்பதால் அதாவது அது அம்பிகையின் அருளாள்தான் நிகழ்வது. அந்த நிலையில் இந்த உடலை மனதை அவன் தாங்கியிருப்பதால் அது அந்த ஞானிக்கு அழகூட்டும்படியாகவே இருக்கின்றது. அவன் சர்வ சாதாரணமாக உடலையும் மனதையும் கையாண்டு அதை எங்கு வைக்க வேண்டுமோ அது என்னவாக இருக்கின்றதோ அப்படியே விட்டுவிடுகின்றான்.

இன்னும் போனால் உங்களுக்கு உடலாலும் மனதாலும் கர்மவினை தொடர்ந்து வருகின்றது. நீங்கள் சிக்கிக் கொள்கிறீர்கள். மனோகாரனான சந்திரனின் களங்கம் இருக்கின்றது ஆனால், அந்த சந்திரன் எப்போது அம்பாளினுடைய முகமாக மாறிவிட்டதோ அல்லது அவள் அந்த மனதை எடுத்துக் கொண்டாளோ அப்படியே அம்பிகையின் அழகு கஸ்தூரி பொட்டாக மாறிவிடும்.

வெறும் மனம் களங்கம். அதுவே அம்பிகைக்கு அல்லது ஞானிக்கு அதுவே அழகு. எதையெல்லால் இங்கு களங்கமாக பார்க்கிறீர்களோ அது எல்லாமே அஞ்ஞானத்தில் இருக்கும் வரைதான். ஞானம் வந்தால் எல்லாமுமே அழகாகும். எனவே, உங்கள் மனதை அவள் வசம் கொடுத்து விடுங்கள். அதற்கு ஒரே வழி அவளை சிந்திப்பது. அவளாகவே ஆவது. அதற்கு தேவை சாதாரண தேடல் அல்ல. தாகத்தோடு சேர்ந்த பக்தி கொண்ட மனம். அது இல்லையெனில் அப்படிப்பட்ட ஞான தேகம் எனக்கு எப்படி வருமென்று அம்பிகையையே கேளுங்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் அடிக்கடி ஒன்று சொல்வார். நீங்கள் கேட்டால் உங்கள் கண்களை அவள் எடுத்துக்கொண்டு அதில் பிரேமை என்கிற மையை தடவி விடுவாள். அதற்குப்பிறகு பிரேமை பேரன்பாகவும் பக்தியாகவும் மாறிவிடும்.

நாமம் சொல்லும் கோயில்

திருமாந்துறை ஈசன் தமது முக்கண்களையும் தீர்க்கமாக உயர்த்தினார். தட்சனின் யாகக் கட்டடத்தின் அஸ்திவாரம் மெல்ல அதிர்ந்தது. கயிலைநாயகன் காமேஸ்வரியைப் பார்க்க பார்வதி கரிய காளியானாள். பேருருவம் கொண்டாள். தட்சன் வெறும் வெற்றுப்பதர் களைக் வெளிரச் சிரிக்கிறான். ஈசனை மறந்து பேரரசனாக இருந்தாலும் அவனை கூப்பிட்டு யாது பயன் என்று காளி சிலிர்த்தாள். ஈசனின் மூன்றாவது திருக்கண்ணான தீக்கண் அனல் கக்க கோபத்தால் கண் சிவந்தார்.

சட்டென்று ரோமக்கால்கள் கோபத்தின் வேகம் தாங்காது வியர்வையில் நனைந்தன, முத்துமுத்தாய் திரண்டவைகளிலிருந்து வீரபத்திரம் எனும் சக்தி பொத்துக் கொண்டு கிளம்பியது. பூரணசிவாம்சமாக இருந்தது அனலாகிச் சிவந்திருந்தது. மறுவினாடியே தட்சனின் யாககூடத்தை நெருங்க வீரபத்திரனின் தணலில் சந்திரன் கருகினான். அந்த இடத்தையே இரண்டாக்கி வகுந்தார் வீரபத்திரர். அழையாவிட்டாலும் நீ என்னை எப்படி எண்ணிணாயோ அப்படியே உன் முகத்தருகே வருவேன் என்பது வந்தார். தட்சனின் தலைகால் புரியாது ஓடினான்.

சந்திரனை சரிபாதியாக பிளந்தார். சந்திரனின் அமுதக்கதிர்களும், குமுதக்கிரணங்களும் இருளில் ஒடுங்கின. வட்டச் சந்திரனை கசக்கி பிழிய வெற்றுச் சக்கையாகி சரிந்தான் சோமன். ஜீவகலைகள் மெல்ல தேய ஆரம்பித்தன. நிலைகுலைந்து வெண்மலரில் கரும்புள்ளிகள்போல தான் செய்த பெரும்பாவம் கருமையாக சுற்றிச் சூழ்ந்தது. ஷயரோகம் எனும் குஷ்டநோய் சந்திரனைச் அடர்ந்த கருப்பு நிறத்தில் திட்டுத்திட்டாக தெறித்தது. சந்திரன் அலறினான். அழகிழந்தான். சித்தத்தில் சிவனின் நினைவு தலைதூக்கிப் பார்த்தது.

வெகுதொலைவே பல யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்த குருபகவான் கயிலையின் அருகே நட்சத்திரமாக ஒளிர்ந்தார். வான்முகில் விலக்கி குருவின் இல்லம் புகுந்தான். சோமன் சோர்வாக வருவதைக் கண்ட குருபகவான் கருணையானார். திவ்ய திருவடியில் வீழ்ந்து பரவினான் சந்திரன். ‘‘தட்சனின் தவறு தெரிந்தும் விளக்கு நோக்கியோடிய விட்டில் பூச்சியாக மாட்டிக் கொண்டேன் மகாதேவா. செஞ்சூரியனின் எதிரொலிப்பை தாங்களின் இன்னருளால் அமுதமாக மாற்றும் அடிப்படை இழந்து தவிக்கிறேன் குருநாதா.

மானிடர்களின் மனமெனும் மையம் இதனால் அவதியுறுமே என அல்லல்படுகிறேன். உச்சியில் விளங்கும் ஆதவனைக் காணாது தேய்வேனோ…’’ என்று சொல்லி அமைதியுற்றான். அப்போது குரு மெல்ல திருவாய் மலர்ந்து வேறோரு திவ்யஷேத்திரத்தைப் பற்றிக் கூறினார். பச்சைப்பசேலென்று இருந்த அவ்விடத்தை சுட்டிக்காட்டினார். அங்கேயே சிலகாலம் தங்கி பூஜித்து வர உன் குஷ்டநோய் தீர்ந்து, தேய்ந்து மங்கும் ஜீவகலைகள் பிரகாசமாக வளரும் என்று சொல்லி முடித்தபோது ஆம்ரவனம் எனும் அந்த மாந்துறையின் இலைகள் சந்தோஷமாகச் சிலிர்த்தன.

ஆம்ரவனம் எனும் திருமாந்துறையில் உறையும் ஈசன் அருட்கண்களைத் திறக்க சுடர்பரப்பி பிரகாசித்தது மாந்துறை. ஐய்யனோடு அம்மையும் அமர்ந்து அருளோடு அமுதத்தையும் பொழிந்தாள். ஆரஅமர வந்த சந்திரன் தலத்தின் தாக்கத்தால் நிறைந்து போனான். காவிரியிலும், தலத்தின் தீர்த்தத்திலும் மாறிமாறி நீராடினான். கருமை கரைந்தோடியது. வெண்மை வெண்ணையாகத் திரண்டு மேலே வந்தது. சட்டென்று பிரசன்னமான உச்சிஷ்டகணபதி ஆம்ரவனநாதரின் அருகே அமர்ந்து தியானிக்கத் தொடங்க சந்திரனும் கணநாதனின் தியானத்தோடு இழைந்து கிடந்தான்.

பார்கடல் பரந்தாமனையும் தவத்தழல் மெல்ல வருட ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஆம்ரவனத்திற்கு விஜயம் புரிந்தார், வைகுந்தவாசன். நாளும் திங்களும் போனதுகூட அறியாது ஆதிசிவனை ஆராதித்த சந்திரன் பூரணப் பொலிவுற்றான். தன்னிலை அறியாது யோகநாயகியின் திருவடியில் யோகநிஷ்டையில் அமர்ந்து ரிஷிபோல மாறிய சந்திரனின் உடலிலுள்ள ஷயரோகம் எனும் குஷ்டநோய் சுத்தமாக மறைந்தது. பெருவட்டப் பேரொளி பரப்பிச் சிவசிந்தனையில் கனிந்து கிடந்தான்.

இந்த மாபெரும் நிகழ்வு நடந்த தலமே திருமாந்துறை. ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள இடங்களுக்கு துறை என்று பெயர். ஆம்ரம் என்றால் மாமரம் என்று பொருள். இத்தலத்தை சுற்றி மாமரங்கள் காடுபோன்று அடர்த்தியாக காணப்பட்டதால் ஆம்ரவனம் அதாவது மாந்துறை என அழைக்கப்பட்டது. பழந்தமிழில் திருமாந்துறை அழகுப்பெயர் பெற்றது. புராணத்தில் நிகழ்ந்த முக்கிய விஷயங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது திருமாந்துறை.

நால்வரில் ஒருவரான ஞானச்செல்வர் சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சம்பந்தர் இத்தலத்தின் கண் தரிசித்துப் பேறுபெற்றதைப்பற்றி ‘‘மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி’’ என்று தான் பாடிச்சென்றதை அழகுறப் பதிவுசெய்திருக்கிறார். சம்பந்தரின் திருவாக்காகவே இன்றும் இயற்கை எழில்சூழ் கொஞ்சும் அழகிய கிராமமே திருமாந்துறை.

எம்பெருமானின் திருச்சந்நதியில் காவிரி நீர்ச்சுழல்போல மாந்துறையாரின் அருட்சுழலும் நம் மனதை சுழற்றிக் காணாது செய்யும் அற்புதச் சந்நதி அது. சோமனான சந்திரனின் சுமை தீர்த்த பேரருளாளன் நம் மனதை ஆற்றுப்படுத்தி இதம் கூட்டும் இனிய சந்நதியில் நின்றால் சுமை நீக்கி சுகம் பெருக்குகிறார் சுயம்புநாதர். ஷயம் என்றால் தேய்தல் என்று பொருள். அஷயம் என்றால் வளர்தல் என்று பொருள். வாழ்வினில் ஏற்படும் துன்பத்தால் மனமுடைந்து மங்கியோரை தமது தீங்கருணையால் வருடி வளம் சேர்ப்பதில் அட்சயவனநாதனே முதல்வன்.

கோயிலின் பிராகாரத்தை வலம் வந்து தனிச்சந்நதியில் வீற்றிருக்கும் யோகநாயகி சந்நதி முன்பு நிற்க மனம் அவள் திருக்கண்களில் பொங்கும் அமுதத்தால் நிறைகிறது. யோகநாயகி உயிர்ச்சக்தியான மனதை இயக்கும் பிராணணோடு தொடர்பு கொண்டது. அவள் சந்நதிக்கருகே கணநேரம் உடல் தாண்டி உயிர்வரை தம் அருட்சக்தியை பரவிடச் செய்வாள் யோகநாயகி.

சந்திரன் மனதிற்கு அதிபதியாவதால் இத்தலத்தில் அவன் தவமியற்றியதே இச்செய்திக்கு சரியான சான்றாக அமைகிறது. சலனமிலா மனதையும், தீர்க்கமான புத்திவீர்யத்தை அருளுவதில் நிகரற்றவள் இத்திருமாந்துறை யோகநாயகி. வாழ்வில் வளம் சேர்ப்பதில் அட்சயபாத்திரமாகக் திகழ்வதில் ஈடுஇணையற்றவள் அஷய நாதரின் அருமைத்துணைவி.

இக்கோயில் யார்கண்களில் படாமல் பெரிய அற்புதத்தை தனக்குள்ளே தேக்கி வைத்திருக்கிறது. சூரியனார்கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவுதான் இருக்கும். திருவாடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான கோயில். சோழப் பெருந்தேவியான செம்பியன் மாதேவி பார்த்துப் பார்த்து செய்த கோயில். பல முறை அவளால் திருப்பணி செய்யப்பட்டு ஆராதிக்கப்பட்ட அழகிய திருத்தலம் இது. திருமாந்துறை சென்று வாருங்கள். வாழ்வில் வளம் பெருக்கிடுங்கள். திருமாந்துறை கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார்கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

The post குழப்பங்கள் நீக்கும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Muk Chandra ,Nabi Viseshika ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan… ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி