×

போதிய வரத்து இல்லாததால் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100ஐ தொட்டது

 

பட்டிவீரன்பட்டி, அக். 13: பட்டிவீரன்பட்டி பகுதியில் சந்தைகளுக்கு போதிய வரத்து இல்லாததால், சின்ன வெங்காயத்தின் விலை, கிலோ ரூ.100ஐ தொட்டது. இதனால், இல்லத்தரசிகள் சமையலுக்கு பெரிய வெங்காயத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சித்தையன்கோட்டை, எம்.வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்தாண்டு சின்ன வெங்காயத்தின் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், சந்தைகளுக்கு வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் வரை கிலோ ரூ.50க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.100ஐ தொட்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் சமையலுக்கு பெரிய வெங்காயம் மற்றும் ஹைபிரிட்ஸ் சின்ன வெங்காயத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வெங்காய விவசாயி ஒருவர் கூறுகையில், ‘சின்ன வெங்காயம் நடவு செய்த 60 நாட்களில் அறுவடைக்கு வரும். இது குறுகிய கால பணப்பயிர் என அழைக்கப்படுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை கொண்ட பகுதிகளில் மட்டுமே நன்கு விளையும். பட்டிவீரன்பட்டி பகுதியில் போதிய மழையின்மை, பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் சரிவு, நோய் தாக்குதல் ஆகிய காரணங்களால் சின்னவெங்காய சாகுபடி பரப்பளவுப் குறைந்து வருகிறது. இதனால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக உள்ளது’’ என்றார்.

The post போதிய வரத்து இல்லாததால் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100ஐ தொட்டது appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Sharp ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் சங்க கூட்டம்