×

மோகனூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

நாமக்கல், அக்.13: 5 ஒன்றியங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் மோகனூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நடப்பாண்டிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டமன்ற கூட்டத்தில் ராமலிங்கம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பேசியதாவது:நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் ஒன்றியம், நாமக்கல் ஒன்றியம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பரமத்தி, கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய மோகனூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த பகுதியில், அதிகளவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடும். எனவே, இந்த ஆண்டே மோகனூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு ராமலிங்கம் எம்எல்ஏ பேசினார். இதற்கு பதிலளித்து நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ₹1400 கோடி செலவில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. ஆலம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மோகனூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் அந்த திட்டம் உடனடியாக துவங்கப்படும் என்றார்.

The post மோகனூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal ,Dinakaran ,
× RELATED சொந்த நிலத்திற்கு பட்டா கேட்டு 82 வயது முதியவர் கலெக்டரிடம் மனு