திருத்தணி, அக். 13: திருத்தணி நகராட்சியில் திறப்பு விழா நடத்தப்பட்டும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத நவீன ஆட்டு இறைச்சி கூடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு வசித்து வருபவர்கள், தங்கள் உணவு தேவைக்காக ஆட்டு இறைச்சிகளை நாள்தோறும், வாரந்தோறும், வாரம் இரண்டு முறை என பல்வேறு உணவு முறைகளில் உண்டு வருகின்றனர். இதேபோன்று, திருத்தணி நகரத்தில் அசைவ ஹோட்டல்களும், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும் பெருமளவில் இயங்கி வருகின்றன. இதனால், திருத்தணி நகரத்தில் மேட்டு தெரு, காந்தி ரோடு மெயின் அக்கையா நாயுடு சாலை, அரக்கோணம் சாலை, திருத்தணி பைபாஸ் சாலை, சென்னை பழைய சாலை மற்றும் சித்தூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை ஓரங்களில் ஆங்காங்கே ஆடுகள் திறந்தவெளியில் அறுக்கப்பட்டு அதை, பொதுவெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக, கடந்த அதிமுக ஆட்சியில் 2015-16ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமந்தபுரம் பகுதியில் ₹25 லட்சம் மதிப்பீட்டில் ஆடு அறுக்கும் நவீன ஆட்டிறைச்சிக்கூடம் கட்டப்பட்டு அது திறந்தும் வைக்கப்பட்டது. இருப்பினும், இன்று வரையில் இந்த இறைச்சிக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், செடி, கொடிகள் வளர்ந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இது பயன்பாட்டுக்கு வராமலேயே கட்டிடத்திற்காக அன்றைய முதலீடான ₹25 லட்சம் அரசு பணம் முழுமையாக வீணாகும் அபாயமும் உள்ளது. எனவே, உடனடியாக ஆடு அறுக்கும் இறைச்சிக் கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2016ம் ஆண்டு ₹25 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆட்டிறைச்சிக்கூடம் கட்டப்பட்டு அது திறந்தும் வைக்கப்பட்டது. இருப்பினும், இன்று வரையில் இந்த இறைச்சிக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை தேவை
ஆடு அறுக்கும் இந்த இறைச்சி கூடம் ஒதுக்கு புறமாக உள்ளது. இதனால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் வரமாட்டார்கள் என்பதால் வியாபாரிகள் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆடு அறுக்கும் வியாகாரிகள் இறைச்சிகளை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், அருகாமையிலேயே இறைச்சி கிடைக்கும்போது இந்த ஒதுக்குபுறமாக இருக்கும் ஆடு அறுக்கும் இறைச்சி கூடத்திற்கு சென்று வாங்க வரமாட்டர்கள் என்ற அச்ச உணர்வு வியாபாரிகளுக்கு உள்ளது. இதன் காரணமாக ஆடு இறைச்சி கூடம் முடியே உள்ளது. சமீபத்தில் உழவர் சந்தையை பயன்படுத்தாத நிலையில், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையின் மூலம் தெருவோர கடைகளை மூடி உழவர் சந்தையை பயன்படுத்த அறிவுறுத்தினர். இதனால் உழவர் சந்தை புத்துயிர் பெற்றது. இதுபோல் திறந்தவெளியில் ஆடு அறுப்பதை தடை செய்து, நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தும் போது கட்டாயம் இந்த ஆட்டிறைச்சிக் கூடத்தை வியாபாரிகளும் மக்களும் பயன்படுத்துவார்கள்.
நோயுற்ற ஆடுகளால் அபாயம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த காலங்களில் ஆடுகள் நகராட்சி பொது சுகாதாரத்துறை சேர்ந்த அலுவலர்கள் ஆடுகளை அறுக்கும் நிலையில் உள்ளதா, நோயில்லாமல் உள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு ஆடுகளை சீலிட்டு வருவார்கள். அந்த ஆடுகளை மட்டுமே அறுத்து பொதுமக்களுக்கு இறைச்சியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்காகவே, நகராட்சி நிர்வாகத்தால் அவர்களுக்கான லைசன்ஸ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திறந்தவெளிகளில் ஆடுகளை அறுக்கும்போது, குட்டியாடுகளையும், நோய்வாய்ப்பட்ட ஆடுகளையும் அறுத்து விற்பனை செய்து அதை உண்பவர்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே, இது போன்ற பிரச்னைகள் எழாமல் இருக்க ஆட்டு இறைச்சி கூடத்தில், ஆடு அறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நகராட்சி சுகாதாரத்துறையினர் மேற்பார்வையிடும். அதன் மூலம் தரமான இறைச்சிகள் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த முடியும். எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருத்தணி நகராட்சியில் நவீன ஆட்டு இறைச்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.
