×

உணவு பாதுகாப்பு துறை நடத்திய ரெய்டில் 6 கடைகளுக்கு ₹30,000 அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை

ஆவடி, அக். 13: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் குட்கா ரெய்டில், ₹30 ஆயிரம் அபராம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி, ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் பல மாதங்களாக குட்கா வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கார்மேகம் மற்றும் ஆவடி காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை ஆவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென குட்கா ரெய்டில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள 34 கடைகளில் தீவிர சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தொடர்பாக, ஆவடி கோவர்த்தனகிரியில் கணபதி கூல் பார் நடத்தி வரும் ஜெயகுருசாமி(56) ஆவடி, அருந்ததிபுரத்தில், சாமுண்டீஸ்வரி ஸ்டோர்ஸ் நடத்தி வரும் வெங்கட்ராமன்(58) உட்பட 6 கடைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து தலா ₹5000 அபராதம் விதிக்கப்பட்டு என மொத்தம் ₹30 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த குட்கா வேட்டையில் ஹான்ஸ் – 450 பாக்கெட், கூலிப் – 300 பாக்கெட், மாவா – அரை கிலோ என பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக முதன்முறையாக பிடிபடும்போது ₹5000, 2வது முறை ₹10,000, 3வது முறை ₹25,000 அபராதம் விதிக்கப்படும். இதனையும் மீறி விற்பனை செய்பவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து கூறினர்.

600 கிலோ குட்கா பறிமுதல்
மதுரவாயல் போலீசார், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த காரை மடக்கி அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து, காரை சோதனை செய்தனர். இந்நிலையில், காரில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருந்தது. இதையடுத்து காருடன் 600 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து மதுரவாயல் காவல்நிலையத்துக்கு எடுத்து சென்றனர். ஓசூரில் இருந்து குட்கா மூட்டைகளை சென்னைக்கு காரில் கடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் குட்கா கடத்தி வந்தவர்கள் யார்? யாருக்கு கொண்டு வந்தனர்? இவர்களுக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உணவு பாதுகாப்பு துறை நடத்திய ரெய்டில் 6 கடைகளுக்கு ₹30,000 அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Food Safety Department ,Avadi ,Gutka ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...