×

திறம்பட செயல்பட்ட 100 போலீசாருக்கு பாராட்டு சான்றுகளுடன் வெகுமதி டிஐஜி வழங்கினார் வேலூர் சரகத்தில் அனைத்து வழக்குகளிலும்

வேலூர், அக்.13: வேலூர் சரகத்தில் திறம்பட செயல்பட்ட 100 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை டிஐஜி முத்துசாமி நேற்று வழங்கினார். வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு வழக்குகளில் திறன்பட செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கும் விழா வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் டிஐஜி முத்துசாமி கலந்துகொண்டு 4 மாவட்டங்களில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, போக்சோ, குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றங்களில் தண்டனை பெற்று கொடுத்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் போலீசார் என சுமார் 100 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 39 பேருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. பாகாயத்தில் வீட்டின் பூட்டு உடைத்து 80 சவரன் நகை கொள்ளை வழக்கில் நகைகளை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த பாகாயம் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தனது சொந்த பணத்தில் இருந்து ₹10 ஆயிரம் ரொக்கப்பரிசை டிஐஜி வழங்கினார்.

வேலூர் மாவட்டத்தில் `செல் டிராக்கர்’ மூலம் சிறப்பாக பணியாற்றிய வேலூர் மாவட்ட சமூக ஊடக மைய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதேபோல் ஆரணியில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும்வரை தண்டனை பெற்றுத்தந்த டிஎஸ்பி ரவிச்சந்திரனையும் டிஐஜி பாராட்டினார். இதில் எஸ்பிக்கள் மணிவண்ணன் (வேலூர்), ஆல்பர்ட்ஜான் (திருப்பத்தூர்), கிரண்ஸ்ருதி (ராணிப்பேட்டை) ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சரகத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், மாதாந்திர குற்ற வழக்குகள் ஆகியவை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் டிஐஜி தலைமையில் நடந்தது. அப்போது 4 மாவட்டங்களிலும் கடந்த 2 மாதங்களில் நடந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை, வழக்குகளின் தற்போதைய நிலை, பெண்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விபத்து குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து எஸ்பிக்களிடம் டிஐஜி கேட்டறிந்தார். முன்னதாக போலீசாரின் குறைதீர்வு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post திறம்பட செயல்பட்ட 100 போலீசாருக்கு பாராட்டு சான்றுகளுடன் வெகுமதி டிஐஜி வழங்கினார் வேலூர் சரகத்தில் அனைத்து வழக்குகளிலும் appeared first on Dinakaran.

Tags : TIG ,Vellore ,TIG Mutusami ,Sarakhan ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி 2 பேர்...