×

அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் திடீர் சந்திப்பு: தெலங்கானா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி?

திருமலை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் சந்தித்தார். இதனால் தெலங்கானா தேர்தலில் பாஜவுடன் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு மோசடி வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் நாரா லோகேஷ் மீதும் அமராவதி உள்வட்ட சாலையை அமைக்க திட்டமிட்டதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவ்வப்போது குண்டூரில் உள்ள சிஐடி விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் நேற்றுமுன்தினம் டெல்லிக்கு சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தங்களை பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குகளை பதிந்து தனது தந்தை சந்திரபாபுவை கைது செய்துள்ளதாகவும், தன்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன் பின்னர் அங்கிருந்து லோகேஷ், நேற்று காலை ஆந்திரா திரும்பியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநில பாஜ தலைவரும், சந்திரபாபுவின் மைத்துனியுமான புரந்தரேஸ்வரி, தெலங்கானா பாஜ தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷண்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். தெலங்கானா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30ம் தேதி நடக்கிறது. அங்கு ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வர பாஜ தீவிரம் காட்டி வருகிறது. எனவே விருப்பம் இல்லாத நிலையிலும் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியோடு கூட்டணி அமைக்க பாஜ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் அடுத்த ஆண்டு ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தெலுங்குதேசம் மற்றும் ஜனசேனா கட்சியோடு பாஜ கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நாராலோகேஷ், தெலங்கானா- பாஜ கூட்டணி அமைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது குறித்தும், தொகுதிகள் பிரித்துக் கொள்வது தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது. பாஜ- தெலுங்கு தேச கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் திடீர் சந்திப்பு: தெலங்கானா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி? appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Nara Lokesh ,Amit Shah ,BJP ,Telangana ,elections ,Tirumala ,Home Minister ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுலா...