×

சரியாக பணியாற்றவில்லையா? முதல்வர் ரங்கசாமிக்கு சந்திர பிரியங்கா பதிலடி: திட்டங்களை பட்டியலிட்டு 9 பக்க அறிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சியில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சந்திர பிரியங்கா ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை, போக்குவரத்து, கலை பண்பாடு, தொழிலாளர், பொருளாதாரம் மற்றும் புள்ளியில், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக செயலபட்டு வந்தார். இவர் தனது துறைகளில் திறன்பட செயல்படாததால் அவரது பதவியை முதல்வர் ரங்கசாமி பறித்துவிட்டு காரைக்காலை சேர்ந்த திருமுருகனுக்கு வழங்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை நேரில் சந்தித்து பரிந்துரை கடிதம் வழங்கினார்.

இந்த கடிதம் ஒன்றிய உள்துறை அமைச்சத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு மீண்டும் புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ஆனால், இவரது பதவி பறிப்பு விவகாரத்தில் அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்று முதல்வர் தரப்பில் கூறப்பட்டாலும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னையால்தான் பதவி பறிக்க பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்திர பிரியங்கா தனது இரண்டரை ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்து என்னென்ன திட்டங்களை செய்தேன் என்று பட்டியலிட்டு 9 பக்க பரபரப்பு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த கடித்தத்தில், ‘புதுச்சேரியில் உள்ள அரசுத்துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்க உருவாக்கப்பட்ட முதல்வர் விருதின் முதல் விருது 2022ம் ஆண்டின் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட தொழிலாளர் துறைக்கு அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்திற்கு இதுவரை இல்லாத வகையில் 2023-24ம் ஆண்டுக்கான ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழை பெண்கள் திருமண உதவித் திட்டத்தில் உதவித்தொகை ரூ.75,000ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் 2019ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான முழு கல்வி கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டும் பிரத்தியேகமாக லைசென்ஸ் பெறும்வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் `பிங்க் டே’ முறை அமல்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் லைசென்ஸ் பெற்றுள்ளனர். 10 ஆண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த பணமுடிப்பு மற்றும் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய கலைமாமணி விருதுகள் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டு ஜூன் முதல் பயனாளிகளுக்கு ரூ.79 கோடி அளவில் தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு உள்ளார்.இது முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

*ராஜினாமா செய்யவில்லை முதல்வரால் நீக்கப்பட்டார்
புதுவை சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது துறைகளை சரிவர கவனிக்காததால் கடந்த வாரம் முதல்வர் ரங்கசாமி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் கொடுத்தார். இதை அறிந்து கொண்ட அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் கடிதம் கொடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்யவில்லை. அவரது செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தாலேயே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்சியில் பாலின பாகுபாடு யாரிடமும் இல்லை’ என்றார்.

The post சரியாக பணியாற்றவில்லையா? முதல்வர் ரங்கசாமிக்கு சந்திர பிரியங்கா பதிலடி: திட்டங்களை பட்டியலிட்டு 9 பக்க அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chandra Priyanka ,Chief Minister ,Rangaswamy ,Puducherry ,NR Congress ,Baj ,government ,Chandra Priyanka Adi Dravidar ,department ,CM ,Rangasamy ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்