×

மயிலாப்பூரில் கோயில்கள் சார்பில் நவராத்திரி விழா அக்டோபர் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருக்கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைத்து குடமுழுக்குகளை நடத்துதல், திருத்தேர், திருக்குளங்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல், வருவாய் இனங்களை பெருக்குதல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

திருக்கோயில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலார், தெய்வப் புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தர் ஆச்சாரியார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கவும், வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் திருக்கோயிலை புனரமைக்கவும் விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 5 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவினை பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது.

அந்த வகையில், உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகின்ற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் 15.10.2023 முதல் 24.10.2023 வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு நாள் நிகழ்வின்போதும், மாலை சிறப்பு வழிபாடும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக 15.10.2023 அன்று மாலை 6 மணிக்கு மாணவ, மாணவியர் பங்குபெறும் சகலகலாவல்லி மாலை பூஜையுடன் தொடங்கி, இரவு 7 மணிக்கு மாம்பலம் சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி மற்றும் ஆர்.சித்ரா ஆகியோரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவின் நிகழ்ச்சிகளில் சமய சான்றோர்கள், ஆன்மிகவாதிகள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதோடு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

The post மயிலாப்பூரில் கோயில்கள் சார்பில் நவராத்திரி விழா அக்டோபர் 15 முதல் 24 வரை நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Navratri festival ,Mylapore ,Minister ,Shekharbabu ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,Arulmiku Kapaleeswarar ,Chennai, Mylapore ,
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...