×

கோயம்பேட்டில் ரூட் தல பிரச்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஒரு மாணவருக்கு சரமாரி வெட்டு

அண்ணாநகர்: சென்னை கீழ்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி வந்த தடம் எண் 15 என்ற பேருந்தின் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் நின்றுக்கொண்டு கானா பாட்டுபாடி நடனமாடினர். அந்த பஸ், கோயம்பேடு வழியாக வரும்போது ஒரு கும்பல் பஸ்சில் ஏறியபோது கல்லூரி மாணவர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரூட் தல பிரச்னையில் ஈடுபட்டவர்கள் என்று கருதி இரண்டு தரப்பினரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனால் பெண் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இரண்டு தரப்பு மாணவர்களும் சாலையில் கிடந்த கற்கள் மற்றும் மதுபாட்டில்கள், கட்டைகள் ஆகியவற்றை எடுத்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஒரு கும்பல், கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சாலையில் ஓடும்போது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் மனோஜ்(20) தலையில் வெட்டி விட்டு சென்றனர். இவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலையில் 5 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தியபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே இரண்டு நாட்களுக்கு முன்பு ரூட் தல பிரச்னையில் மோதல் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக பழிக்குப்பழி வாங்குவதற்கு கல்லூரி மாணவர்கள் தாக்கியுள்ளனர்’’ என்று தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக மாணவர் மனோஜ் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பெண் பயணிகள் கூறும்போது, ‘’கோயம்பேட்டில் கல்லூரி மாணவர்கள் ரூட் தல பிரச்னையில் தாக்கி கொண்டு நடுரோட்டில் கத்தியுடன் விரட்டி சென்று கல்லூரி மாணவனை வெட்டிய சம்பவம் சினிமாவில் வரும் காட்சிகள் போல் இருந்தது. இவர்கள் போடும் சண்டையால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் கல்லூரி மாணவர்கள் கானா பாட்டுப்பாடி பெண் பயணிகளை கிண்டல் செய்கின்றனர். இதனால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என்றனர்.

The post கோயம்பேட்டில் ரூட் தல பிரச்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஒரு மாணவருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annanagar ,Chennai Kilipakkam ,Koyambedu ,
× RELATED குளித்தலை அண்ணாநகர் புறவழிச்...