×

அமமுக அமைப்பு செயலாளர் பாஜவில் சேர முடிவா?.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி: அமமுகவில் அமைப்பு செயலாளராக உள்ள திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான். தமாகா சார்பில் 2001, 2006ல் திருச்சி மேயராக இருந்தார். காங்கிரஸ் சார்பில் 2009ல் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதன்பின் 2016ல் சாருபாலா அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின், டிடிவி.தினகரனின் அமமுகவில் சேர்ந்தார். இப்போது அமமுகவில் அமைப்பு செயலாளராக உள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அமமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சாருபாலாவின் மகன் பிரித்வி ராஜ். துப்பாக்கி சுடும் வீரர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இவர் இடம் பெற்ற இந்திய ஆடவர் அணி ட்ரேப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

இந்நிலையில் சாருபாலா பாஜகவில் சேரப்போவதாகவும், அவரை பாஜக சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட வைக்க மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலையின் அடுத்தக்கட்ட நடைபயணத்தின் போது சாருபாலா பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி சாருபாலாவிடம் கேட்ட போது, நான் பாஜகவில் சேரப்போவதாக கூறப்படும் தகவல் உண்மை இல்லை. அமமுகவில் தான் இருப்பேன் என்றார்.

The post அமமுக அமைப்பு செயலாளர் பாஜவில் சேர முடிவா?.. திருச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AAMUK ,BJP ,Trichy ,Trichy Municipal Corporation ,Mayor ,Charupala ,
× RELATED டெல்லியில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு!