×

96வது வயதில் 4ம் வகுப்பு தேர்வில் முதல் ரேங்க் பெற்ற கார்த்தியாயினி அம்மா 101வது வயதில் மரணம்

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே 96வது வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி முதல் ரேங்க் பெற்ற கேரளாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா 101வது வயதில் நேற்று மரணமடைந்தார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தியாயினி அம்மா (101). மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் இளமை பருவத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்ற சிறு வயதிலேயே வேலைக்கு செல்லத் தொடங்கினார். இந்தநிலையில் கார்த்தியாயினி அம்மாவுக்கு 96வது வயதில் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கேரள அரசு நடத்தும் முழு எழுத்தறிவுத் திட்டத்தில் சேர்ந்து கடந்த 2018ல் 4ம் வகுப்பு படித்தார். மிகவும் ஆர்வத்துடன் படித்தவர், தேர்வில் 98 மதிப்பெண்களுடன் முதல் ரேங்க் பெற்று பாஸ் ஆனார். இதன் மூலம் நாட்டிலேயே மிக அதிக வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆனவர் என்ற பெருமை கார்த்தியாயினி அம்மாவுக்கு கிடைத்தது. அதன் பிறகும் முயற்சியை கைவிடாமல் 7வது வகுப்பில் சேர்ந்து படிக்க கார்த்தியாயினி அம்மா முடிவு செய்து இருந்தார். ஆனால் பக்கவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து படுத்த படுக்கையானதால் 7ம் வகுப்பில் சேர முடியவில்லை. இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு அவருக்கு ‘நாரீ சக்தி’ விருது கிடைத்தது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றார். இந்தநிலையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கார்த்தியாயனி அம்மா நேற்று ஹரிப்பாட்டில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

The post 96வது வயதில் 4ம் வகுப்பு தேர்வில் முதல் ரேங்க் பெற்ற கார்த்தியாயினி அம்மா 101வது வயதில் மரணம் appeared first on Dinakaran.

Tags : Karthiyaini Amma ,Thiruvananthapuram ,Kerala ,India ,Karthiyayini Amma ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...