×

ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுகவினர் கடும் அமளி: அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்

ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு இருக்கை முன்பு அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவரும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசியதாவது: எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து தங்களிடம் (சபாநாயகரிடம்) இதுவரை 10 முறை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை மற்றும் 3 பேரை அதிமுகவில் இருந்து நீக்க என்ன காரணத்திற்காக மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் (சபாநாயகர்) நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: எதிர்க்கட்சி தலைவர் இந்த அவையில் சொன்னது உண்மை. எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரித்துள்ளோம். கலைஞர் வீல் சேரில் சட்டப்பேரவைக்கு வந்து செல்ல வசதியாக இருக்கை அமைக்க வேண்டும் என்று அப்போதைய உறுப்பினர் சக்கரபாணி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். தற்போது இருப்பதே போதும் என்றே பதில் அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்தாலும், கடந்த ஆட்சியில் நீக்கப்படாமல் அப்போதைய சபாநாயகர் அதிமுக உறுப்பினராகவே தனபால் வைத்திருந்தார்.

எடப்படி பழனிசாமி: இருக்கை உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மற்ற உறுப்பினர்களுக்கு உங்கள் விருப்பப்படியே இருக்கை ஒதுக்குங்கள், அதில் நாங்கள் தலையிடவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள். (அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எழுந்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.)

எடப்படி பழனிசாமி: சென்னை உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு கூறி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் எவ்வளவு நாட்கள் தான் பொறுக்க வேண்டும். சட்டப்பேரவை மரபை மாற்ற வேண்டாம்.

சபாநாயகர் அப்பாவு: உங்கள் கட்சி விவகாரத்தை வெளியில் வைத்து கொள்ளுங்கள். இந்த பேரவையை நான் சட்டப்படி தான் நடத்த முடிவும். சபாநாயகரின் இந்த பதிலில் திருப்தியடையாத அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சபாநாயகர் அப்பாவு இருக்கை நோக்கி சென்றனர். பின்னர் கொறடா ரவி உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா செய்தனர். தர்ணாவில் ஈடுபட்ட மற்றும் சபாநாயகர் இருக்கையை முன் நின்று கொண்டிருந்த அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் அவரவர்களின் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அப்பாவு பல முறை கேட்டுக்கொண்டார். ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லாமல் பேரவையில் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

சபாநாயகர் அப்பாவு: பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்ல மறுப்பதால், அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன் என்றார். இதைத்தொடர்ந்து அவை காவலர்கள் பேரவைக்குள் வந்து தரையில் அமர்ந்த தர்ணா போராட்டம் நடத்திவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அதிமுக கொறடா ரவியை, 5 காவலர்கள் அப்படியே தலைக்கு மேல் தூக்கி பேரவையில் இருந்து வெளியேற்றினர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் அவர்களாகவே பேரவையில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் பேரவையில் 15 நிமிடங்கள் கடும் அமளி ஏற்பட்டது.

* ‘சபாநாயகர் மரபை கடைபிடிப்பார் என நம்புகிறோம்’
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்தும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பலமுறை கடிதம் அளித்துள்ளோம். இதுதொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் வழங்கி இருக்கிறோம். இருப்பினும் இதற்கு சரியான பதில் இதுவரை அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவர் மரபை கடைப்பிடிப்பார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

The post ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுகவினர் கடும் அமளி: அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Speaker ,O. Panneerselvam ,Appa ,AIADMK MLAs ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...