×

நவராத்திரி சிறப்புகள்

நன்றி குங்குமம் தோழி

*குற்றாலம்

குற்றால நாதசுவாமி கோவிலில் பராசக்தி பீடம் உள்ளது. இங்கு நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியன்று மத்தளம், முரசு, சங்கநாதம் முழங்க பூஜை நடைபெறும். இதில் கலந்து கொள்வோருக்கு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

*கேரள மாநிலம் பாலக்காடு கொடுந்திப்புள்ளி ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சரஸ்வதி பூஜையன்று நமமி விளக்கு திருவிழா நடைபெறுகிறது. அன்று கோவில் முழுவதும் விளக்குகள் ஏற்றி பூஜை செய்வார்கள். நகரிலும் விளக்குகள் ஏற்றுவார்கள். யானைகள் ஊர்வலம் நடக்கும்.

*கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் பெரியநாயகி அம்மன் பிரகாரத்தில் பராசக்திக்கு தனி சன்னதி உள்ளது. பராசக்திக்கு எதிரில் உள்ள வாசல் நவராத்திரியின்போது மட்டும் திறக்கப்படும். அதனால் இது ‘நவராத்திரி வாசல்’ என்று அழைக்கப்படுகிறது.

*மதுரை ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயிலில் வேலாயுதத்துடன் லிங்க வடிவில் காணப்படுகிறார். ஆயுத பூஜையன்று இறைவனும், அம்பாளும் வெள்ளை யானையில் எழுந்தருள்கிறார்கள்.

*ஒடிசா மாநிலத்தில் நவராத்திரி விழாவை 16 நாட்கள் கொண்டாடுகிறார்கள். (ஷோடச பூஜை). ஆயுத பூஜை அன்று பூரி ஜெகந்நாதர் கோயிலில் ஜெகந்நாதரின் கரங்களில் உள்ள சங்கு, சக்கரங்களுக்கும் பூஜைகள் நடப்பது சிறப்பு. அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமியை அகவபஞ்சமி என்று போற்றுகின்றனர். அன்று குதிரைகளுக்கு திருமஞ்சனம் செய்து, திலகமிட்டு, பூமாலை கட்டி பூஜை செய்கின்றனர். அடுத்து நான்கு யானைகளுக்கு கஜ பூஜை நடைபெறும்.

*சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணிஅம்மன் நவராத்திரி ஒன்பதாவது நாளன்று மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் திருவீதி உலா வருவார்.

*நவராத்திரி ஒன்பது நாட்களிலும் முப்பெரும் தேவியரை (லட்சுமி, பார்வதி, சரஸ்வதி) பூஜித்து கொலுவைத்து வழிபட்டு வாழ்வில் வளம் பெறலாம்.

நவராத்திரி கொலு பார்க்

*நவராத்திரி கொலுவில் பொம்மைகள் வைப்பது போலவே பூங்கா அமைப்பதும் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘பார்க்’ அழகாக அமைய சில டிப்ஸ்.

*ஒரு பானையை கவிழ்த்து, மண் கொண்டு மூடினால், மண் செலவு குறையும். வேலையும் சுலபம். வடிவமும் மலை போல இருக்கும்.

*தரையில் ஒரு ஜமக்காளத்தை விரித்து விட்டு, மணல் பரப்பி கிராமம், பார்க், கோயில் எல்லாமே அமைக்கலாம். கொலு முடிந்ததும் சுத்தம் செய்வதும் எளிது.

*பச்சை வர்ண பொடியை பூங்காவில் சீராகத் தூவினால் புல் தரையாகி விடும். மரத் தூணில் பச்சைநிறப் பொடியை கலந்து மலை, காடு போன்ற இடங்களில் பயன்படுத்தினால் பச்சைப் பசேலென்று இருக்கும்.

*பார்க்கில் ஐஸ்க்ரீம் குச்சிகளை வரிசையாக மண்ணில் நிறுத்தி, வேலி செய்யலாம்.

*கொலுவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கிண்ணங்களில் வேப்பம் புண்ணாக்கு கலந்து மண்னை நிரப்பி ராகி, வெந்தயம், நெல், தனியா தெளித்து செடிகள் வளர்த்து, பார்க்கில் வைத்தால் பார்க்க அழகு, பசுமை, பிறகு சமையலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

– எஸ்.ராஜம், திருச்சி.

The post நவராத்திரி சிறப்புகள் appeared first on Dinakaran.

Tags : Navratri ,Kunkum Doshi ,Kutalam Koorthala Nathaswamy ,
× RELATED பிள்ளைகளின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் சரிசெய்வோம்!