×

இலைகளின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் அன்றாடம் பார்க்கும் பல மரங்களும், இலைகளும் சாதாரணமாக தெரிந்தாலும், இயற்கை அதில் மருத்துவ குணங்களை கொடுத்திருக்கிறது. இந்த இலைகளை பயன்படுத்துவதன் மூலம் பல பலன்களை பெறலாம். அந்தவகையில், சில இலைகளின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.புளிய இலை: புளிய இலையையும், வேப்பிலையையும் சேர்த்து இடித்து நீர்விட்டு காய்ச்சி புண்களைக் கழுவி வர ஆறாத புண்களும் ஆறிவிடும். புளிய இலையை இடித்துக் கொண்டு அதை நீர்விட்டு கொதிக்க வைத்து கீல் வாயு காரணமாக ஏற்பட்ட வீக்கங்களுக்கு பற்றுபோட்டுவர, நல்ல குணம் கிடைக்கும்.

நொச்சி இலை: இந்த இலையை சுக்கு சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி நீங்கும். நொச்சி இலைகளை வேகவைத்து நீராவி பிடித்தால் வியர்வை உண்டாகி காய்ச்சல் தணியும். உடல் வலியும் நீங்கும். இந்த இலைக் குடிநீர் அனைத்து வகை காய்ச்சலையும் குணப்படுத்தும்.நறுவலி இலை: இந்த இலையை இடித்து சாறு எடுத்து முகத்தில் காணப்படும் பரு அல்லது கொப்புளங்களில் தடவி வர அவை மறையத் தொடங்கும்.

நுனா இலை: நுனா இலை மற்றும் பழத்தையும் குடிநீராக்கி அருந்த பெண்களின் மாதவிடாய் போக்கை சரிசெய்யும்.நாவல் இலை: நாவல் கொழுந்து இலையை ஏலக்காய் சேர்த்துக் காய்ச்சி, ஆட்டுப்பாலுடன் கலந்து உட்கொள்ள, செரியாமல் போகும் கழிச்சல், சீதக்கழிச்சல் சரியாகும்.

பப்பாளி இலை: பப்பாளி இலை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் உடலை பல வகையான தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. காயங்களை ஆற்றுதல், உடல் திசுக்களின் வளர்ச்சி, சேதமடைந்த செல் மீண்டும் உருவாக்குதல் போன்ற செயல்களையும் செய்கிறது. மேலும் பப்பாளி இலைகளை லேசாக நசுக்கி வதக்கி பால் கொடுத்து வரும் தாய்மார்களின் மார்பகங்களில் கட்டிவர, பால் பெருக்கு அதிகரிக்கும்.

பவளமல்லி இலை: பவளமல்லியின் இலைக் கொழுந்தை அரைத்து இஞ்சிச் சாறு கலந்து தினமும் 2 வேளை உட்கொண்டுவர காய்ச்சல் குணமாகும். இலைகளை வெந்நீர்விட்டு கொதிக்கவைத்து தினமும் 2 வேளை உட்கொண்டு வந்தால் முதுகுவலி, காய்ச்சல் குணமாகும். பவள மல்லியின் இலைச்சாற்றில் உப்பும், தேனும் கலந்து உட்கொண்டால் புழுக்கள் வெளியேறிவிடும். இது மலச்சிக்கலையும் போக்கும்.

நெல்லி இலை: நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தினை அரைத்து மோரில் கலந்து அருந்த சீதக்கழிச்சல் குணமாகும்.

பூவரசு இலை: இந்த இலையை அரைத்து வீக்கங்களின் மேல் கட்டலாம். தேமல் போன்ற சரும வியாதிகளுக்கும் பற்று போடலாம்.

செம்பருத்தி இலை: செம்பருத்தி இலையை நீர்விட்டு கொதிக்கவைத்து அருந்திவர, இதய நோய்களை குணப்படுத்துவதோடு, வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகளையும் சரிசெய்யும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்பிரமணியன்

The post இலைகளின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,
× RELATED ங போல் வளை