×

ங போல் வளை

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

தேர்ந்தெடுக்கும் தெளிவு

இந்தக் கட்டுரை கிட்டத்தட்ட, முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி என்றே கொள்ளலாம். கால தேச வர்த்தமானம் கருதி பயிற்சிகளையும், முறைமைகளையும் தேர்ந்தெடுப்பது என்பது பொதுவான விதிகளில் ஒன்று. அதே வேளையில் அவற்றை தேர்ந்தெடுக்கும் சாதகன் யார்? எப்படியானவன்? அவனுடைய தேவை என்ன என்கிற தெளிவும் மிக முக்கியமானது. ஆகவே, இங்கே யோகப் பயிற்சிகள் என்பது உடலும் உள்ளமும் நலம்தானா? எனத் திரும்பத் திரும்ப கேட்கிறது.

இங்கு நாம் அனைவருக்கும் உயிரின் நோக்கம் என ஒன்று இருக்கிறது. அது நமக்குத் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால், தன் உயிரின் நோக்கம் தெரிந்த ஒருவர் நிச்சயமாகவே சாமானியராக இருக்க முடியாது. அவர் ஆற்ற வேண்டியவற்றைச் சிறப்பாக ஆற்றிக்கொண்டும், தனது மேலான பயணத்துக்குக் காத்துக்கொண்டும் இருப்பார்.
மற்றவர்கள் இங்கே தனது உயிரின் நோக்கத்தை அறிய எண்ணற்ற வழிமுறைகளும் சாத்தியங்களும் இருப்பதாகவே மரபு சில பாதைகளை முன்வைக்கிறது. அப்படி ஏதேனும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்ப வரை, அதில் முழுமூச்சாக ஈடுபடுபவரைசாதகன் என்கிறது.

அதிலும் தெளிவான திட்டங்களையும், பாடங்களையும் கொண்ட மரபுகளும் ஏராளம். இவ்வகைப் பாடத் திட்டங்கள் இறைநிலை அடைவதையோ தரிசனங்களை காண்பதையோ பற்றியது அல்ல. மாறாக, இங்கிருக்கும் போதுமேகூட அந்த உயிர் மகிழ்ந்தும், நிறைந்தும் வாழ்ந்திட முடியும் என வகுக்கிறது. அதிலும் தத்துவத்தையும் பயிற்சியையும் இணைத்துப் பார்க்கும் மரபுகளான, யோகமரபு போன்ற ஆழமான வேர்கள் கொண்ட மரபுகள், மனிதனை அவன் வாழ்வை சிறுசிறு கூறுகளாக, அலகுகளாக வகுத்தும் பகுத்தும் முழுமையாகத் தெரிந்து பாடங்களை வழங்குகின்றன.

ஆகவே, பல்வேறு மரபுகள் ஒன்றை ஒன்று இணைத்தே புரிந்துகொண்டன. அதிலும் தங்களுக்கான சாதனா முறைகளை ஏற்படுத்தும் பொழுது, சித்த மரபோ, ஆயுர்வேத மரபோ, யோகமோ, வர்மக்கலையோ, களரி பயிட்டு முறையோ, தாந்த்ரீக பயிற்சிகளோ தங்களுக்குள் உரையாடிக்கொண்டே வளர்த்து வந்துள்ளனர்.

இதில் யோக மரபு, உபவேதம் எனச் சொல்லப்படும் ஆயுர்வேதத்தின் துணையுடன் சில முக்கியமான முடிவுகளை எடுக்கிறது.அதில் ஆயுர்வேதத்தின் அடிப்படையான, மூன்று தோஷங்கள் எனப்படும் வாதம், பித்தம், கபம் என்று கருதும் சப்த தாதுக்கள் எனப்படும் ரஸ, ரத்த, மாம்ச, மேதா, அஸ்தி, மஜ்ஜை, சுக்லம் எனும் கருத்துமாக உயிரின் அடிப்படை கட்டுமானங்களை மையமாக வைத்து மனிதனைப் பகுக்கிறது. அதனை மையமாக வைத்து தனித்தனி பயிற்சித் திட்டங்களை வகுத்துள்ளது.

உதாரணமாக, வாதபிரக்ருதி எனப்படும் உடல்கொண்டவரின் அடிப்படை அம்சங்கள், உலர்ந்த தோல்கள் மற்றும், முடி, மெலிந்த தேகம், வறண்ட குரல்வளை மற்றும் குரல், துரிதமான நடை மற்றும் பேச்சு, அசைந்துகொண்டே இருக்கும் மூட்டு இணைப்புப் பகுதிகள், ஆழ்ந்த உறக்கமின்மை என வரையறை செய்யப்படுகிறது. எனவே, இவருக்கான பயிற்சிகளை வடிவமைக்கும் பொழுது, நீண்ட சுவாசமும், சுவாசத்துடன் இணைந்து செய்யக்கூடிய அசைவுகளும் என ஆசனங்களை வடிவமைக்க வேண்டும்.

அதில் ஒரு குறிப்பிட்ட நிலையில் நீண்ட நேரம் நிலை நிறுத்துதல், முன்புறமாக குனிந்து செய்யக்கூடிய ஆசனங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுத்தல் மற்றும் நிலத்துடன் இணைந்து ஒரு நடனம் போன்ற அசைவுகளாக வடிவைமைத்தல் மிகவும் அவசியம். அதே போல தியானம் என்பது வாத பிரக்ருதிகளுக்கு அவ்வளவு எளிதில் அமைவதில்லை. ஆகவே, மாற்று மரபுகளின் தியான முறைகளை வடிவமைக்க வேண்டும், கண்களை மூடி நீண்ட நேரம் அமர முடியாத இவ்வகை மனிதர்கள், நிச்சயமாக வேறுவகை தியான முறைகளைக் கற்க வேண்டும். பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு குறிப்பிட்ட அளவில் உதவும் என்பதால், அவர்களுடைய மூச்சின் தன்மை மற்றும் தகுதியறிந்து வழங்க வேண்டும்.

அதேபோல பித்த பிரக்ருதிகளின் அடிப்படை என்பது சீரான உணவு ஜீரணமும், மனோதிடமும், புத்திக் கூர்மையும், அதேவேளையில் கடுங்கோபம் மிக்கவர்களாகவும், தோலின் சுருக்கங்களும், பருக்களும் மெலிதான முடியுடையவர்களாகவும், நிறைய நீரும், உணவும் உண்பவர்களாகவும் இருப்பர். ஆகவே இவர்களுக்கு கண்களை மூடியும், நிதானமாகவும் செய்யக்கூடிய ஆசனங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

பத்மாசனத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பயிற்சிகளைத்தான் இவர்கள் முதலில் முயற்சிக்க வேண்டும். மூச்சுப் பயிற்சியில் வெளியேறும் மூச்சைவிட உள்ளிழுக்கும் மூச்சின் அமைப்பை வைத்து இவர்களுக்கான மூச்சுப்பயிற்சியை திட்டமிட வேண்டும். தவறான மூச்சுப் பயிற்சியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உடல் வெப்பமடைந்து எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ள உடல்வாகு இவர்களுடையது. பெரும்பாலும் யோகப் பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிடுபவர்கள் இவ்வகை பக்க விளைவுகளால்தான்.

இறுதியாக கப பிரக்ருதிகள், பருமனான உடலும், சோர்வும், தூக்கமின்மையும் கொண்டவர்கள், போதிய ஜீரணமின்மை, மூட்டு இணைப்புகளில் ஸ்திரத்தமை இல்லாமை, சோர்வும் நெஞ்சு எரிச்சலும் கொண்டவர்கள், நல்ல ஞாபக சக்தியும், மகிழ்வான மனமும் கொண்டவர்கள். இவர்களுக்கான பயிற்சிகள் துரிதமான அசைவுகள் கொண்டதாகவும், திடமான சுவாசத்தை மையமாக வைத்து செய்யக்கூடிய பயிற்சிகளாகவும், அதே வேளையில் உள்ளிழுக்கும் மூச்சின் அளவும் தன்மையும் தெரிந்து மூச்சுடன் இணைந்து செய்யக்கூடிய பயிற்சிகளாகவும் இருத்தல் அவசியம்.

முன் நெற்றிப்பகுதியில் வேர்க்கும் வரை இவர்கள் ஆசனப்பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. தாதுக்களில் சுக்ல தாது எனப்படும் ஏழாவது தாது திடமாக இருப்பவர்கள் என்பதால், தாமச குணமும் சாத்வீக குணமும் மாறிமாறிச் செயல்படும். ஆகவே இவர்களை தொடர்ந்து பயிற்சிகளை செய்யவைப்பது மிகுந்த சவாலான விஷயம். அதனால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதே வேளையில் இவ்வகை மனிதர்களுக்கு உடலில் நோய்கள் அல்லது பக்கவிளைவுகள் உண்டானால் குணமாக சற்று தாமதமாகும் என்பதால், அதிக கண்காணிப்பு அவசியமாகிறது.

மனிதர்களில் இதயப்பகுதியில் தொடங்கி, உச்சந்தலை வரை கபமும், வயிறு முதல் நெஞ்சு வரை பித்தமும், வயிற்றுக்கு கீழே வாதமும் இருப்பதாக ஆயுர்வேதம் வகைப்படுத்துகிறது. இதில் ஏதேனும் ஒன்று மிகும் பொழுதும், குறைவு படும்பொழுதும், நாம் நோயால் தாக்கப்படுகிறோம். மருத்துவத்தில் எப்படி தனித்தனி உடலுக்குத் தனித்தனி நோயும் மருந்தும் கண்டறியப்பட்டுள்ளதோ அதே போலத்தான் வாழ்வியல் பயிற்சிளையும் கண்டறிய வேண்டும்.

நூறு பேர் ஒரு மைதானத்தில் அமர்ந்து எல்லோரும் ஒரே மாதிரி ஆசனங்களை செய்வதோ, அனைவரும் ஒரே போல மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டு பிராணாயாமம் செய்வதோ, கண்களை மூடி தியானம் பழகுவதோ, பலனளிக்காது. மேலும் பக்கவிளைவையும் உண்டாக்கக்கூடும். என்றேனும் ஒரு நாள் ஒரு குழுவாக அதைச் செய்து படம் பிடித்து மகிழ்ந்து கொள்ளலாம். எது எவ்வகையிலும் வாழ்வியல் பலனை தரமுடியாது. நாம் ஏற்கெனவே சொன்னது போல பயிற்சிகள் என்பவை ஒவ்வொரு கால கட்டத்திலும் உங்களுக்கு பலனைக் கொடுத்து உயிரின் நோக்கம், அது செல்லும் திசை ஆகியவற்றை மேம்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். அவ்வாறான பயிற்சிகளை தேர்ந்தெடுத்தலே தெளிவு எனப்படும்.

தனுராசனம்

நாம் இந்தப் பகுதியில் தனுராசனம் பற்றி காணலாம். மரபார்ந்த பயிற்சிகளில் இது முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஏழு நிலைகள் இருந்தாலும் அனைத்துமே, உள்ளுறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்க வைக்க உதவுபவை. நரம்பு மண்டலத்தில் மிகப்பெரிய நேர்நிலை தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்க ஆசனமாகக் கருதப்படுகிறது. தரையில் குப்புற படுத்த நிலையில், கால்களைப் பின்புறமாக மடித்து குதிகால் பகுதியை பிடித்துக்கொள்ளலாம், மூச்சு உள்ளே இழுக்கும்பொழுது தலை மற்றும் கால்கள் இரண்டையும் மேல்நோக்கி உயர்த்தலாம். மூச்சை வெளியிட்டுக்கொண்டே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம். இப்படி பத்து முறை செய்யலாம்.

The post ங போல் வளை appeared first on Dinakaran.

Tags : Saffron ,Selandarajan ,
× RELATED முட்டை மிட்டாய்