×

சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் தரும் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சுற்றுச்சூழல் மாசு, சூரிய வெப்பம், முதுமை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவை தோலைப் பாதிக்கிறது. இவற்றில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்போம். அந்த வகையில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஆரோக்கியமான உணவு பழக்கத்துக்கு மாறுவதுதான். ஏனெனில், ஒருவரின் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது உடலில் உள்ள வைட்டமின் சத்துக்களே. ஒவ்வொரு வைட்டமினுக்கும் சருமத்தை ஒவ்வொரு விதத்தில் பராமரிக்கும் சக்தி உள்ளது.

உதாரணமாக, வைட்டமின் ஏ: சருமச் சுருக்கங்களை குறைக்கிறது. முகப்பருவைத் தடுக்கிறது. வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை அடைவதை தடுக்கிறது. இந்த வைட்டமின் ஏ ஆனது, கேரட், பப்பாளி, மஞ்சள் பூசணி, வாழை, கறிவேப்பிலை, புதினா, முருங்கைக்கீரை, பசலைக்கீரை ஆகியவற்றில் அதிகளவில் உள்ளது. எனவே, வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி: வறண்ட சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. சருமம் மென்மையாக இருக்க உதவுகிறது. மணத்தக்காளிக், கீரை, கைக்குத்தல் அரிசி, கோதுமைத்தவிடு, வாழைப்பழம், பால் பொருட்கள், முட்டை, பட்டாணி, சோயா பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது.வைட்டமின் சி: முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கிறது. சரும வெடிப்பு போன்ற பிரச்சனைகளை இயற்கையான முறையில் சரிசெய்கிறது. எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கொய்யாப்பழம், நெல்லிக்காய், மாங்காய், முட்டைக்கோஸ் ஆகியவற்றால் இந்த வைட்டமின் நிறைந்துள்ளது.

வைட்டமின் டி: சரும செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. சருமத்திற்கு பொலிவு கொடுக்கிறது. மீன், இறைச்சி போன்றவற்றில் அதிகம் உள்ள இந்த வைட்டமினைச் சூரிய வெளிச்சத்தில் இருந்தும் பெறலாம்.வைட்டமின் ஈ: சருமம் ஈரப்பதம் இழப்பைத் தடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். கோடையில் சருமம் நிறம் மாறுவதைத் தடுக்கிறது. பாதாம் பருப்பு, பட்டாணி, பூசணி, எண்ணெய்கள் ஆகியவற்றின் மூலம் இந்த வைட்டமின் சத்து நமக்கு கிடைக்கிறது.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

The post சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் தரும் பயன்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED தைராய்டு பிரச்னைகளும் தீர்வும்!