×

மதுரையில் என்ஐஏ திடீர் சோதனை; இளைஞரிடம் செல்போன் பறிமுதல்

மதுரை: மதுரையில் காஜிமார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தி, அங்கிருந்த இளைஞரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறி, அவ்வப்போது இஸ்லாமியர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள காஜிமார் தெருவை சேர்ந்தவர் தாஜூதீன் ஹமித் (30) என்பவரின் வீட்டுக்கு இன்று காலை என்ஐஏ டிஎஸ்பி அஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சென்றனர். அங்கு சோதனை நடத்தி விட்டு, தாஜூதீனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் மோடி பீகாருக்கு சென்றபோது, அம்மாநிலத்தில் சந்தேகத்திற்குரிய சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக தாஜூதீனிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் தாஜூதீன் கூறுகையில், ‘நான் பீகாருக்கு செல்லாத நிலையில், அம்மாநில வழக்கு குறித்த விசாரணை ஆவணத்தை என்னிடம் காட்டி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பாஸ்போர்ட் வழக்கில் கடந்த 2 மாதமாக தலைமறைவாக இருந்ததாக பரவும் தகவல் தவறானது. மதுரையில் தான் இருக்கிறேன். எனது செல்போனையும் பறிமுதல் செய்தனர். இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

The post மதுரையில் என்ஐஏ திடீர் சோதனை; இளைஞரிடம் செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Madurai ,Gazimar Street ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை