×

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட கண்டாச்சிபுரம்-திருக்கோவிலூர் சாலை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

கண்டாச்சிபுரம், அக். 11: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் அடிப்படை தேவைகளுக்கு கண்டாச்சிபுரம் வந்து செல்கின்றனர். மேலும் திருக்கோவிலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செஞ்சி, திருப்பதி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கண்டாச்சிபுரம் வந்து பேருந்து ஏறி செல்கின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினால் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணி மாதக்கணக்கில் மந்தமாக நடைபெற்று வருவதால் கண்டாச்சிபுரம் முக்கிய கடைவீதியில் உள்ள வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் வணிக வளாகங்கள் மற்றும் சாலையோர கடை, சாலையோர வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தேங்கி பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலையில் காணப்பட்டது. மேலும் நோய் தொற்று பரவும் அபாய நிலையும் நீடித்து வந்தது.

இந்நிலையில் திருக்கோவிலூர் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கும் பணிக்காக கண்டாச்சிபுரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையை முன்னறிவிப்பின்றி திடீரென தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மூடினர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இப்பணி சுமார் 10 நாட்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் கண்டாச்சிபுரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாற்று வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள வீரங்கிபுரம் சாலை வழியாக கண்டாச்சிபுரம் திரவுபதி அம்மன் கோயில் வழியாக திருக்கோவிலூர் செல்ல வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோவிலூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளும் இந்த வழியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். திடீரென சாலை துண்டிக்கப்பட்டதால் அவ்வழியே புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் அலைந்து சென்றனர்.

The post முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட கண்டாச்சிபுரம்-திருக்கோவிலூர் சாலை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Kandachipuram-Thirukkovilur road ,Kandachipuram ,Villupuram district ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...