×

கத்தி காட்டி மிரட்டி பெண் டாக்டரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் பள்ளிகொண்டா கிளினிக்கில் நோயாளிபோல வந்து

பள்ளிகொண்டா, அக்.11: பள்ளிகொண்டா கிளினிக்கில் நோயாளிபோல வந்து கத்திகாட்டி மிரட்டி நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடிகொடுத்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
ேவலூர் மாவட்டம் பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் வசிப்பவர் இளையராஜா. இவர் சென்னையில் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் சந்திரகலா. ஓய்வுபெற்ற அரசு மருத்துவரான இவர் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் இளையராஜா நேற்று கிளினிக்கில் அமர்ந்து சந்திரகலாவிடம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, மதியம் 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் நோயாளிபோல் கிளினிக்கில் நுழைந்தார். சந்திரகலா அவரை உடல் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோதே திடீரென அவரது பாக்கெட்டில் இருந்த சிறிய கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை பறிக்க முயன்றுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத மருத்துவர் சந்திரகலா மற்றும் இளையராஜா கத்தி கூச்சலிடவே வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அப்போது, வீட்டின் வெளியே இருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதற்கிடையே இளையராஜா வீட்டின் அலமாரியில் இருந்த தங்க வளையல்கள் திருட்டுபோனது தெரிந்தது. தொடர்ந்து, அந்த வாலிபரை சோதனை செய்ததில் தங்க வளையல்கள் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்களின் உதவியுடன் வாலிபரின் கைகளை கயிற்றால் கட்டி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இளையராஜா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் திருநெல்வேலி மாவட்டம் மாதா நடுதெருவை சேர்ந்த மணிகண்டன்(40) என்பது தெரிந்தது. மணிகண்டனுடன் 10 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு வேலை தேடி வந்ததாகவும், வயிற்று பிழைப்புக்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிளினிக்கில் ெபண் டாக்டரிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பள்ளிெகாண்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கத்தி காட்டி மிரட்டி பெண் டாக்டரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர் பள்ளிகொண்டா கிளினிக்கில் நோயாளிபோல வந்து appeared first on Dinakaran.

Tags : Pallikonda clinic ,Pallikonda ,
× RELATED பள்ளிகொண்டா பேரூராட்சியில் நாளுக்கு...