×

குஜராத் மாடலின் அவலம் வறுமை கோட்டுக்கு கீழ் மூன்றில் ஒரு பகுதி மக்கள்: புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், முதல் நாள் பயணமாக குஜராத் சென்றிருந்தார். ஆனால், அவர் செல்லும் வழியில் சில இடங்களில் சிறிது தூரத்துக்கு வெள்ளைத்துணியால் மறைப்பு வைக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பிறகே, சாலையோரம் இருந்த குடிசைகளை வெள்ளைத் துணியால் மறைத்திருந்தது அம்பலம் ஆனது. இதேபோலத்தான், தேர்தலுக்கு முன்பாக பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாடல் என்று சொல்லியே பாஜ தேசிய அளவில் பிரமாண்ட வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ள நிலையில், அந்த மாநிலத்தின் அவலமும், மக்களின் பரிதாப நிலையும் அவ்வப்போது அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த வகையில், சமீபத்தில் வெளியான அவலம், அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர் என்பதுதான். ஊரக பகுதிகளில் மாதம் ரூ.816க்கு கீழ், நகர பகுதிகளில் மாதம் ரூ.1,000க்கு கீழ் வருவாய் ஈட்டுபவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர உணவு, தானியங்கள் இலவசமாக கிடைப்பதற்காக பிபிஎல் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. குஜராத்தில் 31,61,310 குடும்பங்களில் பிபிஎல் கார்டு வைத்துள்ளனர் என புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

இதை பேரவையில் வெளியிட்டவர், குஜராத் மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாச்சுபாய் மகஜ்பாய் காபத். குஜராத் மாடல்… துடிப்பான குஜராத்… என வளர்ச்சிக்கு என்னெவெல்லாம் அடையாளமாக இருக்கிறதோ அதையெல்லாம் அடை மொழியாகப் போட்டு குஜராத் பிம்பத்தை தூக்கி நிறுத்தி வருகின்றனர் பாஜவினர். ஆனால், இதனை சுக்கு நூறாக்குவது போல மேற்கண்ட புள்ளி விவரம் அமைந்திருக்கிறது. குஜராத்தில் 71,60,253 குடும்பங்கள் ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். இவர்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 31,61,310 குடும்பங்களில் பரம ஏழைகள் 16,28,744 குடும்பங்கள், ஏழைகள் 15,32,566 குடும்பங்கள் உள்ளன.

இந்த மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் கடந்த 3 ஆண்டில் 3,101 குடும்பங்கள் இணைந்திருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 2020-21 நிதியாண்டில் 1,047 குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்ந்தனர். இவர்களில் 14 குடும்பங்கள் மட்டுமே வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் பெற்று பட்டியலில் இருந்து வெளியே வந்துள்ளன. இதுபோல் 2021-22 நிதியாண்டில் இந்த பட்டியலில் 1,751 குடும்பங்கள் இணைந்துள்ளன. இதில் 2 குடும்பங்கள் வெளியேறி விட்டன. 2022-23 நிதியாண்டில் இப்பட்டியலில் 303 குடும்பங்கள் புதிதாக சேர்ந்துள்ள நிலையில், ஒரு குடும்பம் மட்டுமே வெளியேறியுள்ளது. குஜராத்தை வளர்ச்சி அடைந்த மாநிலத்தை போல பாஜவினர் காட்டிக் கொள்ளும் நிலையில், மேற்கண்ட தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காரணம், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதுதான் என்கின்றனர். குஜராத்தில் அதிகபட்சமாக பனாக்ஷந்தா மாவட்டத்தில் 2,37,078 குடும்பங்கள், தாகோட் மாவட்டத்தில் 2,25,520 குடும்பங்கள், போர்பந்தரில் 21,065 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் குடும்ப அட்டை பெற்றுள்ளன. இது குறித்து அகமதாபாத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹேமந்த் குமார் ஷா கூறுகையில், ‘’31.64 லட்சம் குடும்பங்களில், ஒரு குடும்பத்துக்கு 6 பேர் என கணக்கிட்டால், சுமார் 1.89 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இது குஜராத் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியாகும்’’ என்றார். கடந்த 2011ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத் மக்கள் தொகை 6.04 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள்
31,61,310
பரம ஏழை குடும்பங்கள்
16,28,744
ஏழை குடும்பங்கள்
15,32,566

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பட்டியலில் சேர்ந்தவர்கள்
நிதியாண்டு குடும்பங்கள்
2020-21 1,047
2021-22 1,751
2022-23 303

The post குஜராத் மாடலின் அவலம் வறுமை கோட்டுக்கு கீழ் மூன்றில் ஒரு பகுதி மக்கள்: புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Boris Johnson ,India ,
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...