×

கடப்பாக்கம் – ஆலம்பரை குப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள்: மக்கள் அவதி

செய்யூர்: கடப்பாக்கம் – ஆலம்பரை குப்பம் செல்லும் வழியில் மீன் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பஜார் பகுதியில் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு மீன்கள் விற்கும் வியாபாரிகளுக்காக கடந்த பல வருடங்களுக்கு முன் பஜார் பகுதி அருகிலேயே பல லட்சம் மதிப்பில், மீன் சந்தைக் கட்டிடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் சந்தை கட்டிடம் அமைத்து கொடுக்கப்பட்டு, சில வருடங்கள் மட்டுமே மீன் வியாபாரிகள் இங்கு மீன் வியாபாரம் செய்து வந்தனர். அதன்பின் ஒரு சில மீன் வியாபாரிகள் மற்ற மீன் வியாரிகளிடம் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக, மீன் சந்தை கட்டிடத்திலிருந்து சாலையோரம் தங்களது கடைகளை அமைத்து கொண்டனர். நாளடைவில் வியாபாரிகள் ஒவ்வொருவராக தங்களது கடையினை சாலையோரம் அமைத்துக் கொண்டனர். இந்நிலையில், தற்போது மீன் வியாபாரிகள் அவ்வழியே செல்லும் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால், கடப்பாக்கத்திலிருந்து அலம்பரைக் குப்பத்திற்கு சென்று வரும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், அவ்வழியாக ஆலம்பரைக்கோட்டை சுற்றுலா தளத்திற்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், அவ்வழியாக கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடைக்கழிநாடு பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு சாலையில் ஆக்கிரமித்துள்ள மீன் கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கடப்பாக்கம் – ஆலம்பரை குப்பம் செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள்: மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kadapakkam ,Alamparai Kuppam ,Seyyur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...