×

மதுரைக்கு விரைவில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் அணைகளை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம்: செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலால் சிரிப்பலை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி எழுப்பி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது: மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். ரூ.1,296 கோடியில் அதிமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது. மதுரை மக்களுக்காக இன்னும் 30 ஆண்டுகளுக்கு 40 லட்சம் மக்கள் தொகை கூடினாலும் குடிநீர் பிரச்னை வராத அளவுக்கு 24 மணி நேரத்துக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்து அந்த பணிகள் நடந்து வருகிறது. பணிகள் சற்று ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே, அமைச்சர் பணியை விரைவுப்படுத்தி, இப்போது சாக்கடை நீர் எல்லாம் கலந்து வருகிறது. அது எல்லாம் இல்லாமல் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை குடும்பத்தில் உள்ள பெண்கள் வெளியே வராமல் வீட்டிலேயே பிடித்து கொள்ளும் அளவில் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அதிமுக ஆரம்பித்தாலும் வனத்துறை கிணறு வெட்ட அனுமதி தரவில்லை. அந்த அனுமதியை நாங்கள் தான் பெற்றோம். 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்டு விட்டனர். இந்த நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 15 கிலோ மீட்டர் பைப் லைன் போட வேண்டிய பணிகள் மட்டுமே உள்ளது. அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்கி வைப்பார் என்றார்.

அப்போது எழுந்த அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன், ‘‘தண்ணீரை அமைச்சர் நிச்சயமாக கொடுப்பார். அந்த தண்ணீர் காலியாகாமல் இருக்க அணைகைளை தெர்மோகோலால் மூடி வைத்திருக்கிறோம். அதனால், கவலைப்படாதீர்கள்’’ என்றார். இதனால் சிரிப்பலை எழுந்தது.

The post மதுரைக்கு விரைவில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் அணைகளை தெர்மாகோலால் மூடி வைத்துள்ளோம்: செல்லூர் ராஜூக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலால் சிரிப்பலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Minister ,Durai Murugan ,Sellur Raju ,Former minister ,Legislative Assembly ,Duraimurugan ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...