×

கல்யாண முருங்கையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பிரத்யேகமாக கல்யாணமுருங்கை செடியை யாரும் வளர்ப்பதில்லை. கிராமப்புறங்களில், விவசாய பகுதிகளில், வேலி ஓரங்களில் தானாகவே வளரும்.இதன் இலை மட்டுமல்ல, பூக்கள், விதைகள், பட்டைகள் என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. முள்முருங்கை, முருக்கமரம், முள்முருக்கு என்றும் இதனை சொல்வார்கள். இதன் இலை மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக்குளித்து வந்தால், உடம்பிலுள்ள சொறி, சிரங்கு குணமாகும். சளி, இருமல் தொல்லையை இந்த இலை போக்கும்.

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொந்தரவு இருந்தால், இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து கசக்கி, சாறு எடுத்து தருவார்கள். அல்லது கல்யாணமுருங்கை இலை சாற்றை, வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் தேன் சேர்த்து குழந்தைகளுக்கு தரலாம். இதனால் கழிவுகளுடன் சேர்ந்து பூச்சிகள் வெளியேறிவிடும். பெரியவர்களும் இதை சாப்பிடலாம். ஆனால், வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இதை சாப்பிட்டால், இரண்டு மணி நேரத்துக்கு எதையும் சாப்பிடக் கூடாது. அன்றைய நாள் முழுக்க வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த அருமருந்து இந்த கல்யாணமுருங்கை.

இந்த இலையை அரைத்து ஜூஸ் போல செய்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும்.குழந்தைபேறுக்கு இந்த இலை மிகவும் பயன்படுகிறது. இதன் இலை சாற்றை தினமும் குடித்து வந்தால், குழந்தைபாக்கியம் இல்லாத பெண்களின் குறைகள் நீங்குமாம். கல்யாணமுருங்கைப் பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

குழந்தையின்மைக்கு, கல்யாணமுருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து, மாதவிடாய் வருவதற்கு முன்று நாள் முன்பு மாதவிடாய் முடிந்த பிறகு 3 நாளும், காலையில் வெறும் வயிற்றில் 3 மாதம் குடித்து வர, குழந்தைப் பேறு உண்டாகும்.அதுபோன்று பிரசவித்த பெண்கள், பால் சுரப்பை அதிகரிக்க இதன் இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்து சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். இதன் இலையை, சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், நெய் சேர்த்து வதக்கி ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் பிரச்னையை சீர் செய்யும்.

தொகுப்பு: கவிதா பாலாஜி

The post கல்யாண முருங்கையின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,
× RELATED ங போல் வளை