உடுமலை, அக்.9: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி 4ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்கார்பதி மின்நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது. கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்துறை, காவல்துறை, நீர்வள ஆதார துறை, விவசாயிகள், மின்துறை ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினரும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இருப்பினும், கான்டூர் கால்வாயிலும், பிஏபி 4ம் மண்டல கால்வாய்களிலும் தண்ணீர் திருட்டு தொடர்கிறது. பிவிசி பைப்புகளை கால்வாயில் போட்டு மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால், பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், தீவிரமாக கண்காணித்து, தண்ணீர் திருடுபவர்களை கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கான்டூர் கால்வாயில் தொடரும் தண்ணீர் திருட்டு appeared first on Dinakaran.