×

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு: 107 பதக்கங்களுடன் இந்தியா சாதனை

ஹாங்சோ: சீனாவில் நடைபெற்று வந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கையுடன் நிறைவடைந்தது. இந்தியா முதல் முறையாக 107 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்து அசத்தியது. ஹாங்சோ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 23ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இந்த போட்டியில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 655 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரமாண்ட அணி களமிறங்கியது. எதிர்பார்த்தைப் போலவே பதக்க வேட்டையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய குழுவினர் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைக் குவித்து வரலாற்று சாதனை படைத்தது.

2018ல் இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை பெற்றதே அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில், ஹாங்சோவில் முதல் முறையாக பதக்க எண்ணிக்கையில் சதம் கடந்து அசத்தியுள்ளது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சீனா 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என மொத்தம் 383 பதக்கங்களைக் குவித்து முதலிடம் பிடித்தது. ஜப்பான் 2வது இடத்தையும், தென் கொரியா 3வது இடத்தையும் பிடித்த நிலையில் இந்தியா 4வது இடத்தை வசப்படுத்தியது.

மகத்தான சாதனை படைத்துள்ள இந்திய குழுவினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, டெல்லியில் நாளை அவர்களுக்கு விருந்தளித்து கவுரவிக்க உள்ளார். போட்டியின் கடைசி நாளான நேற்று கராத்தே மற்றும் கலைநய நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் முடிவுக்கு வந்தது. அடுத்த போட்டி ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் 2026, செப். 19ம் தேதி தொடங்கி அக்.4 வரை நடைபெற உள்ளது.

The post சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு: 107 பதக்கங்களுடன் இந்தியா சாதனை appeared first on Dinakaran.

Tags : Asian Games in ,China ,India ,Hangzhou ,19th Asian Games ,India… ,Dinakaran ,
× RELATED 18 மாதங்களுக்கு பின் சீன தூதர் பொறுப்பேற்பு