×

திருமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் திருப்பதி கோயிலில் மாதந்தோறும் ரூ.100 கோடி உண்டியல் வருமானம்: 11 ஆயிரம் கிலோ தங்கம், ரூ.17,000 கோடி டெபாசிட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாதந்தோறும் உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை தாண்டுகிறது. கலியுக தெய்வம் எனப்போற்றப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. உண்டியல் காணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நாளைக்கு 600 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர். கடந்த 1982ம் ஆண்டு வரை பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் குலசேகரப்படி வரை அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 1990ம் ஆண்டில் நாளொன்றுக்கு 32 ஆயிரத்து 333 பக்தர்கள் என ஆண்டுக்கு சுமார் 1.18 கோடி பக்தர்கள் தரிசித்து வந்தனர். கடந்த 2000ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து ஆண்டுக்கு 2 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் ஆனது. பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியதால், கடந்த 2005ம் ஆண்டு முதல் மகாலகு தரிசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் 50 அடி தூரத்தில் இருந்து ஜெயபேரி-விஜயபேரி துவார பாலகர்கள் சிலை வரை மட்டுமே நின்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த திட்டம் இதுநாள் வரை நீடிக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல் தினசரி சுமார் 70 ஆயிரம் பேர் வீதம் சராசரியாக ஆண்டுக்கு 2.55 கோடி பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

பக்தர்கள் வருகைக்கு ஏற்ப உண்டியல் வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஒரேநாளில் ரூ.7 கோடிக்கு மேல் காணிக்கை கிடைத்தது. தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் உண்டியல் காணிக்கை கிடைத்து வருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.1,500 கோடிக்கு தேவஸ்தானம் பட்ஜெட் தயாரித்தது. இதுதவிர உண்டியலில் ஓராண்டுக்கு 1300 கிலோ வரை தங்கம் கிடைத்து வருகிறது.2020 – 2021 கொரோனாவால் 80 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் அந்த ஆண்டு ரூ.721 கோடியாக உண்டியல் வருவாய் குறைந்தது.

அதற்கடுத்த ஆண்டில் கொரோனா தாக்கம் இருந்ததால் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 2021 – 2022 ஆண்டில் ரூ.933 கோடி உண்டியலில் வருவாய் கிடைத்தது. 2022- 2023ம் நிதி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து கொரோனா முந்திய காலத்தை போன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் உண்டியல் மூலம் ரூ.1613 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த 1996-1997ல் உண்டியல் வருமானம் ரூ.99.8 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post திருமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் பக்தர்கள் திருப்பதி கோயிலில் மாதந்தோறும் ரூ.100 கோடி உண்டியல் வருமானம்: 11 ஆயிரம் கிலோ தங்கம், ரூ.17,000 கோடி டெபாசிட் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati Temple ,Tirupati Seven Malayan Temple ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...