பழநி: தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச், தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு நவ.3ம் தேதி துவக்கப்பட்ட இந்த ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடமாகும். 1 மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்காரில் கடந்த ஆக.18ம் தேதி ஷாப்ட் இயந்திரம் பழுதானது.
இதனைத்தொடர்ந்து வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. புதிய ஷாப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஞ்சாமிர்த டின்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வந்தது. ரோப்கார் வல்லுநர் குழுவின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற் இன்று கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை ரோப்கார் பெட்டி மற்றும் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து பக்தர்கள் உற்சாகத்துடன் பயணிக்க துவங்கி உள்ளனர். இதுபோல் ரோப்கார் நிலையத்தின் முன்புறம் கைபேசி பாதுகாப்பு மையமும் இன்றுமுதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரோப்கார் நிலையத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் இன்று ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 50 நாட்களுக்கு பிறகு ரோப்கார் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் முடங்கிக் கிடக்கும் 2வது ரோப்கார் திட்டம் மற்றும் 3வது வின்ச் போன்றவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பழநி கோயிலில் 50 நாட்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்தது ரோப்கார் சேவை: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.
