×

தென்பெண்ணை ஆற்று படுகையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

 

பண்ருட்டி, அக். 8: கடலூர் அரசு ஐடிஐயில் பயின்று வரும் மாணவர் பிரதாப், திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் டேவிட் ராஜ்குமார், வேல்முருகன், உளுந்தாம்பட்டு அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் முகேஷ்பாபு மற்றும் தமிழரசன் ஆகியோர் உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் உடன் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால 3 செம்பு நாணயங்களை கண்டெடுத்தனர். மாணவர்கள் கண்டெடுத்த நாணயங்களை பற்றி தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன்னர்கள் தங்களின் போர்வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த 3 நாணயங்களில் இரண்டு ராஜராஜன் பெயர் பொறித்த சோழர் நாணயம். மற்றொன்று விஜயநகரகால நாணயம் ஆகும். ராஜராஜன் நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில் “ஸ்ரீராஜராஜ” என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ராஜராஜன் காலத்தில் பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட 2 சோழர் காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன.

அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். மூன்றாவது நாணயம் தேவநாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள விஜயநகர பேரரசு நாணயம் ஆகும். ஏற்கனவே இதே மாணவர்கள், தென்பெண்ணை ஆற்றில் பழங்கால பானை ஓடுகள் மற்றும் உறைகிணறுகள் போன்றவைகளை அடையாளம் கண்டு கண்டறிந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககாலம் முதல் சோழர்காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தென்பெண்ணை ஆற்று பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாகவும், வரலாற்று மிக்க நகரங்களாகவும் இருந்து இருக்கலாம், என்றார்.

The post தென்பெண்ணை ஆற்று படுகையில் பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tenpenna River Basin ,Panruti ,Pratap ,Cuddalore Government ITI ,Tiruthurayur Government Higher Secondary School ,South Penna River Basin ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு