×

ஒன்றிய, மாநில அரசுகள் தலா 30 % மானியம்; சூரிய ஒளி மின் மயமாக்கல் திட்டம்: குமரி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில், அக்.8 : குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வையாளர் பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் 5000 விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின் மயமாக்கல் செய்வதற்காக பிரதமரின் உழவர் எரி சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் இலவச விவசாய மின் இணைப்புக்கு 31.3.2013க்கு பிறகு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் சூரிய ஒளி மின் மயமாக்கல் திட்டத்தில் பயன் பெறலாம்.

விவசாயத்துக்கு தேவையான நீரை சூரிய ஒளி தண்ணீர் பம்பு மூலம் பெறுவதோடு மீதமுள்ள நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் பணம் பெறும் வசதி உள்ளது. இத் திட்டத்துக்கு இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சகம் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். தமிழக அரசின் மூலம் 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். மீதம் உள்ள 40 சதவீதம் பங்கில் 30 சதவீதம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கடன் பெறும் வசதி அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்து மின் கட்டமைப்பில் உட்செலுத்தும் மின்சாரம் ஒவ்வொரு யூனிட்டுக்கும் ₹2.28 வீதம் சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் வங்கிக்கு கடனை திருப்பி வழங்கும் வகையில் கடன் காலங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்தும்.

சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்து மின் கட்டமைப்பில் உட் செலுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ.0.50 வீதம் வருமானம் அனைத்து காலங்களுக்கும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கும். விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டி தரும் இந்த அரிய திட்டத்தை பயன்படுத்தி ஏற்கனவே புதிய விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் பயன்பெற சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பிரிவு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறி உள்ளார்.

The post ஒன்றிய, மாநில அரசுகள் தலா 30 % மானியம்; சூரிய ஒளி மின் மயமாக்கல் திட்டம்: குமரி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Union ,Governments ,Nagercoil ,Kumari District Electricity Board ,Supervisor ,Padmakumar ,Union and ,State Governments ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...