×

தஞ்சாவூரில் சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்காவை சுத்தப்படுத்தி நடவடிக்கை

தஞ்சாவூர், அக்.8: தினகரன் செய்தி எதிரொலியாக தஞ்சாவூரில் சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்காவில் செடி,கொடிகள் அகற்றப்பட்டன. பூங்கா முழுவதும் சுத்தம் செய்து மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே காவல்துறைக்கு சொந்தமான இடத்தில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி ரூ.50 லட்சம் மதிப்பில் 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர், உள்ளே நடைபாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போது எந்த பகுதியில் நடந்து செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு வழிமுறைகள், சாலைகளை கடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த பூங்காவில் அறிந்து கொள்ளலாம். மேலும், சாலை விதிமுறைகள் குறித்தும் அறிவிப்பு பலகைகள், போக்குவரத்து சிக்னல், சாலை குறியீடுகளும், எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் சிறுவர்கள், பொதுமக்கள் எளிய முறையில் போக்குவரத்து விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம். பணிகள் அனைத்தும் முடிந்து 10 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் பூங்கா பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது என தினகரனில் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பூங்காவில் செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். இந்த நடவடிக்கையையடுத்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழையும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்தையும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post தஞ்சாவூரில் சாலை விதிகளை விளக்கும் சிறுவர் பூங்காவை சுத்தப்படுத்தி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...