நன்றி குங்குமம் தோழி
தொழிலதிபர் டெய்சி மார்கன்
‘‘நான் ஒரு சக்சஸ் ஃபுல்லான தொழிலதிபரா வளர்வேன்னு கனவிலும் நினைச்சு பார்த்தது இல்லை. சின்ன வயதிலேயே கல்யாணம்… அதனால் நான் சந்தித்த கஷ்டங்கள். நான்கு மகள்களுடன் நான் எடுத்த அந்த ஒரு முடிவுதான் என்னை இன்று உலகம் முழுதும் அறியக்கூடிய ஒரு தொழிலதிபரா வலம் வர செய்துள்ளது’’ என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த டெய்சி மார்கன். இவர் சிங்கப்பூரில் நைட்கிளப் மட்டுமில்லாமல் டாக்டர் மார்கன் என்ற பெயரில் சரும பராமரிப்பு பொருட்களின் நிறுவனத்தின் இயக்குனர். தற்போது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து மலேசியாவில் 9ஸ்கின் என்ற சரும அழகு பராமரிப்பு பொருட்களை அறிமுகம் செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் டெய்சி தான் தொழிலதிபராக உயர்ந்த பயணம் பற்றி பகிர்ந்து கொண்டார்.
‘‘சிங்கப்பூர்தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். சொந்த வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்களை சந்தித்த பிறகு, நான் எனக்காகவும் என் மகள்களுக்காகவும் ஒரு அழகான வாழ்க்கையை வாழ விரும்பினேன். அப்போது என் மனதில் தோன்றியது ஒரே விஷயம்தான். எல்லோரும் அறியக்கூடிய ஒரு தொழிலதிபரா வளர வேண்டும் என்பது தான். அதன் அடிப்பையில்தான் நான் இரவு நேர கிளப் ஒன்றினை துவங்கினேன்.
ஒரு கிளப் இரண்டாக மாறியது. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சமயத்தில் சில காரணங்களால் நான் என்னுடைய ஒரு நைட் கிளப்பினை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சறுக்கல் என்னை மேலும் பல தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது’’ என்றவர், சருமம் சார்ந்த தொழிலில் ஈடுபட்ட காரணம் பற்றி விவரித்தார்.
‘‘ஒருவரின் அடையாளம் அவர்களின் அழகான சருமம். பளபளப்பான சருமம் பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். குறிப்பாக பெண்களுக்கு தங்களின் சருமத்தில் சின்னதாக ஒரு கரும்புள்ளிகள் இருந்தாலே அதை நீக்க என்ன எல்லாம் செய்ய வேண்டும்னு யோசிப்பாங்க. நானும் அப்படித்தான். எனக்கும் ஆரம்ப காலத்தில் சருமத்தில் முகப்பரு பிரச்னை இருந்தது. அதற்காக நான் பல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சொல்லப்போனால் நான் பார்க்காத டாக்டர் இல்லை. அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. சருமம் பொறுத்தவரை அதனை தினமும் பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்க நாம் சில சரும பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்தப் பொருட்கள் என்ன? அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? அதற்கான ஃபார்முலா என்ன என்று நான் தேட ஆரம்பித்தேன். அப்போது தான் தெரிந்தது இதனை முறையாக கற்றுக் கொண்டால் தான் புரிந்துகொள்ள முடியும் என்று. தனிப்பட்ட பயிற்சிகள் மேற்கொண்டேன்.
அதன் மூலம் சரும பராமரிப்பு தயாரிப்பதற்கான ஃபார்முலாவினை கண்டறிந்தேன். பிறகு வேதியியல் நிபுணர்களின் ஆலோசனையுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் என்னுடைய டாக்டர் மார்கன் சரும பராமரிப்பு நிறுவனம். இதில் சருமப் பொலிவிற்கான சீரம், சன்ஸ்கிரீன் லோஷன், சருமத்தை பளபளக்க செய்யும் கிரீம், க்ளென்சர், தலைமுடிக்கான எண்ணெய் என சருமத்தை பொலிவடைய செய்யும் பலவிதமான பராமரிப்பு பொருட்களை அறிமுகம் செய்தேன்’’ என்றவர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்தது பற்றி விவரித்தார்.
‘‘எனக்கும், நயன் மற்றும் விக்னேஷ் சிவனுக்குமான நட்பு ஆறு வருடங்களாக தொடர்கிறது. தமிழகத்தின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நயன்தாரா. அவர் தன்னுடைய சருமப் பொலிவினை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்வார். அதனாலேயே எனக்கும் அவருக்கும் சருமப் பராமரிப்பு குறித்த புரிதல் மற்றும் தேடல் நிறையவே உண்டு. ஆனால் அதை ஒரு தொழிலாக மாற்றினால் என்ன என்று யோசனையை விதைத்தவர் விக்னேஷ் சிவன்தான். அவர் தான் முழுக்க முழுக்க ஆயுர்வேத முறையில் எந்தவித ரசாயனமும் கலக்காத சரும பாதுகாப்பு பொருட்களை தயாரிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
அதற்கு காரணம் அவரின் அன்பு மனைவி நயன்தாரா. அவர் தன் சரும பராமரிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் கவனம் அவரை ரொம்பவே பிரமிக்க வைத்துள்ளது. அதை எல்லா பெண்களுக்கும் கொடுக்க விரும்பினார். காரணம், ஒவ்வொரு பெண்ணும் தான் ஒரு நட்சத்திரம் போல் மிளிர வேண்டும் என்று ஆசைப்படுவாள். அவர்களின் ஆசைக்கு நாங்க கொடுத்த வடிவம்தான் 9ஸ்கின்னின் சருமப் பராமரிப்பு பொருட்கள். இதன் மூலம் பெண்களின் சருமப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினோம். குறிப்பாக இந்தப் பொருட்கள் ஒரு பெண்ணுடைய அன்றாட சரும பாதுகாப்பினை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் நாங்க இருவரும் உறுதியாக இருந்தோம்’’ என்றவர் இதில் அறிமுகப்படுத்தும் பொருட்களை பற்றி விவரித்தார்.
‘‘எங்களின் நோக்கம் சருமப் பராமரிப்பு பொருட்களை தயாரிப்பது மட்டுமில்லை, அதனால் ஒருவர் தங்களின் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை உணர வைக்க வேண்டும் என்பதுதான். சொல்லப்போனால் அவர்கள் புதிதாக பிறந்தது போன்ற உணர்வினை கொடுக்க வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு பொருட்களையும் மிகவும் கவனமாக தயாரித்தோம். இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ரசாயனமற்றது. குறிப்பாக சல்ஃபேட், கோமிடோஜெனிக் மற்றும் பாராஃபென் பயன்பாடு இல்லாதது. எல்லா சருமத்தினரும் பயன்படுத்தலாம். இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கக் கூடிய பொருட்களை மட்டும்தான் பயன்படுத்தி இருக்கிறோம். உதாரணத்திற்கு சீபக்தார்ன் என்று ஒரு வகை பெர்ரிப் பழங்கள், மத்திய ஆசியாவில் விளையக்கூடியவை.
இவை சரும நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. புஹா மேரா, சிவப்பு நிறமான இந்த பழம் இந்தோனேஷியா பப்புவா கினியாவில் அதிக அளவு காணப்படும். இதில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் நிறைந்துள்ளது. இது சருமத்தை மிருதுவாகவும் மற்றும் சுருக்கம் அடையாமல் பாதுகாக்கும். இவை மட்டுமில்லாமல் நம்முடைய இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் குங்குமாதி மற்றும் அஸ்வகந்தா போன்ற சரும பாதுகாப்பு பொருட்களையும் இதில் பயன்படுத்தி இருக்கிறோம்.
தற்போது தினமும் பயன்படுத்தக்கூடிய மாய்சரைசர், ஆன்டி ஏஜிங் கிரீம், சருமத்தினை பொலிவாக்கும் சீரம், எண்ணெய் மற்றும் உடல் பராமரிப்பு என ஐந்து விதமான பொருட்களை நாங்க அறிமுகம் செய்கிறோம். இதனை பயன்படுத்தும் போது உங்கள் சருமம் குழந்தைகளின் சருமம் போல் மென்மையாகவும், ஸ்பாவில் பெறக்கூடிய சரும பாதுகாப்புகளும் கிடைக்கும் என்பதற்கு நான் கியாரன்டி. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, யுனைடெட் அரபு எமிரெட், யுரோப், இங்கிலாந்து, கனடாவிலும் இது கிடைக்கும்’’ என்றவர், எதிர்கால திட்டம் குறித்தும் விவரித்தார்.
‘‘பிசினஸ் என்று வந்துவிட்டால் அதில் ஏற்றம் இறக்கம் என்பது இன்றியமையாதது. குறிப்பாக பெண்கள் தொழில் செய்யும் போது அதில் பல சிக்கல்களை சந்தித்திருக்கேன். அதற்காக நான் பின்வாங்கவில்லை. ஒவ்வொரு முறை நான் கீழே விழும் போதும், என்னால் முடியும் என்று ஒரு அடி முன் எடுத்து வைத்து என் இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன். அதை எல்லாம் கடந்துதான் நான் ஒரு தொழிலதிபராக உருவாகி இருக்கேன்.
தற்போது 9ஸ்கின்னில் ஐந்து விதமான சருமப் பராமரிப்பு பொருட்களை அறிமுகம் செய்திருக்கிறோம். இதில் மேலும் பல பொருட்களை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. அதாவது, பெண்களின் சருமப் பராமரிப்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றின் பின் ஒன்றாக அறிமுகம் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு பெண்ணுடைய சருமத்தையும் அழகாக உணரச் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்றார் டெய்சி மார்கன்.
தொகுப்பு: ப்ரியா
The post இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம்! appeared first on Dinakaran.