×

ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் இல்லாமல், காவிரியில் கர்நாடகா நீர் திறக்க நடவடிக்கை செய்ய வேண்டும் : வைகோ காட்டம்

சென்னை : ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுத்து, காவிரியில் கர்நாடகா நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா அரசு காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி, தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கோரிக்கை வைத்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தது.

இரு மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவிரி மேலாண்மை ஆணையம், செப்டம்பர் 18ஆம் தேதி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி வீதம், 15 நாட்களுக்கு நீர் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.ஆனால், உத்தரவை அமல்படுத்த மறுத்த கர்நாடகா அரசு, ‘போதிய பருவமழை இல்லாததால், எங்களிடம் போதிய நீர் இல்லை, நீர் திறக்க முடியாது’ எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்த வேண்டும், தண்ணீர் திறக்க வேண்டும்’ என செப்டம்பர் 21ஆம் தேதி உத்தரவிட்டது.இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் செப்டம்பர்-29 ஆம் தேதி ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில், புதுடில்லியில் நடந்தது.

தமிழக அரசின் சார்பில் , “கர்நாடக அணைகளில், 50 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. எனவே, அம்மாநில அரசு நினைத்தால், 5,000 கன அடி வரை திறந்துவிட முடியும். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி தந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவும் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற அனைத்து பாதிப்புகளையும் தமிழகம் தாங்கிக் கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா செயல்படுகிறது. எனவே, வினாடிக்கு 12,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும்” என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, “அணைகளில் உள்ள நீர், எங்களின் தேவைக்கே போதவில்லை. விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கும் பிரச்னையாகி வருகிறது. எனவே, 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டுமென்ற ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்கக் கூடாது” என அடாவடியாக மறுத்தது.

ஒழுங்காற்றுக்குழு அளித்த புள்ளி விபரங்களை பரிசீலனை செய்த காவேரி மேலாண்மை ஆணையம், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் தேவைகளை ஆய்வு செய்தது.“ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் ஏற்க கூடியவையாக உள்ளன. எனவே, அந்தப் பரிந்துரைகளுக்கு ஆணையம் ஒப்புதல் தெரிவிக்கிறது. அதன்படி, அடுத்த 15 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக மாநில அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை போய்கொண்டிருப்பதால், காவேரி படுகைப் பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் கருகி நாசமாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,காவேரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெறுவோம் என்றும் கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் நேற்று தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.வறட்சி காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுத்து, காவிரியில் கர்நாடகா நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் இல்லாமல், காவிரியில் கர்நாடகா நீர் திறக்க நடவடிக்கை செய்ய வேண்டும் : வைகோ காட்டம் appeared first on Dinakaran.

Tags : Union BJP Govt ,Cauvery ,Karnataka ,Vaiko Kattam ,Chennai ,Union BJP government ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’