×

கூட்டணியில் இருந்து இலை விலகியதால் தாமரை நிர்வாகிகள் கட்சி தாவும் முடிவில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை கட்சியின் ஒன்றிய பெண் அமைச்சரை சந்திக்க பயந்து, ஓரங்கட்டியது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரையுடன் கூட்டணி கிடையாது என இலை தலைமை முறித்துக்கொண்ட பிறகு, கோவை வந்த ஒன்றிய நிதியமைச்சரை இலை கட்சி மக்கள் பிரதிநிதிகள் நான்கு பேர் சந்தித்து பேச திட்டமிட்டாங்களாம். ஆனால், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி இலை கட்சி மக்கள் பிரதிநிதி மட்டும் நால்வர் கூட்டணியில் இருந்து எஸ்கேப் ஆயிட்டாராம். தாமரை கட்சி தலைமை என்னுடைய எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவே இல்லை. அதனால், நான் வர முடியாது, தாமரை சமாச்சாரமே எனக்கு வேண்டாம்னு’’ திட்டவட்டமாக சொல்லிட்டாராம்.

கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்போல் தப்பித்து நால்வர் கூட்டணியை மூவர் கூட்டணியாக மாறும்படி செய்துட்டாராம். அத்துடன், கூட்டணி முறிவுக்கு முன்பாக, கடந்த வாரம் கோவையில் நடந்த இலை கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தின்போது, இவருக்கு சால்வை அணிவிக்க வந்த தாமரை தொண்டர் ஒருவரை, திட்டி அனுப்பிவிட்டாராம்.. இவர் தாமரை எதிர்ப்பில் உறுதியாக இருப்பதால், இவரது செயல்பாட்டை கோவையை சேர்ந்த தாமரைக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக கண்காணித்து மேலிடத்துக்கு மெசேஜ் பாஸ் செய்து வர்றாங்களாம்… அதன் பின் விளைவை விரைவில் சந்திப்பார் என்பதுதான் தாமரை நிர்வாகிகளின் திட்டமாக இருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கரன்சியை கொடுத்தாத்தான் வேலை நடக்கும்னு எங்கே அடித்து பேசிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குயின் பேட்டை மாவட்டத்துல தி என்ற எழுத்துல தொடங்குற பிளாக் இருக்குது. இந்த ஆபீஸ்ல ஏதாச்சும் வாங்காம எந்த வேலையும் நடக்காதாம். கான்ட்ராக்ட் காரங்க ஒர்க் ஆர்டர் வாங்க வரும்போது ஆபிசுக்கு வெறும் கையுடன் வரக்கூடாதாம். அன்பளிப்பு கொடுத்துட்டுத்தான் ஒர்க் ஆர்டர் வாங்க வரணுமாம். அதுமட்டுமில்லாம, வேலை முடிஞ்ச உடனே, பில் பாஸ் ஆகணும்னாலும், அதுக்கு தனியா கொடுக்கணுமாம். அப்போது தான் உடனடியாக பில் பாஸ் ஆகுமாம். இல்லைன்னா.. மாச கணக்குல பெண்டிங் இருக்குமாம். தலைமை அதிகாரிக்கு, சம்திங் கொடுக்கலன்னா.. எந்த வேலையும் நடக்காதாம்.

அதுமட்டுமில்லாம ஒரு ஊராட்சிக்கு 5 கே வரைக்கும் டூப்ளிகேட் பில் ரெடி செய்யணுமாம். இப்படி அந்த ஆபிஸ்ல நடக்குற அட்டகாசம் தாங்க முடியலையாம். யார்கிட்ட புகார் கொடுத்தாலும் கவலையில்லை. உயர் அதிகாரிகளுக்கும் சேர்த்துதான் வாங்குறோம்னு கறார் காட்டுறாங்களாம். உயர் அதிகாரிங்க விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு குரல் பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் ஒட்டி உறவாடி ஒரு சீட்டு கிடைக்கும்னு தாமரை கட்சியில் இருந்தவர்களின் தற்போதையை நிலை என்னவாம்…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கூட்டணியில இருந்து இலைக்கட்சி வெளியேறிய நிலையில் ரொம்பவே உடைஞ்சி போயிருப்பது தாமரைக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தானாம். எப்படியாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிடணுமுன்னு அவர்கள் போட்ட திட்டத்தை சேலத்து தலைவர் தவிடுபொடியாக்கிட்டாராம். இந்த கூட்டணி இனி ஒட்டவே ஒட்டாதுன்னு சேலத்து தலைவர் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வதோடு பல்வேறு கட்சிகள் எங்களிடம் ஓடி வருவாங்கன்னு நம்பிக்கிட்டிருக்காராம். இதற்காக அவர்களின் நாலரையாண்டு ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்து மீண்டும் சீட் கிடைக்காமல் வெளியேறியவரை இலைக்கட்சியின் ஷிண்டேவாக கருதப்படும் கொங்குநாட்டுக்காரர் மாங்கனி நகருக்கு அழைச்சிட்டு வந்தாராம்.

அவரது ஏற்பாட்டின்பேரில் இந்த சந்திப்பு நடந்திருக்கு. அதுல கொங்குநாட்டில் இழந்த செல்வாக்கை மீண்டும் கொண்டுவர திட்டம் போட்டிருக்காங்களாம். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அனைத்து தீர்மானங்களையும் ஒன்றியத்துல நிறைவேற்ற இலைக்கட்சி முழு ஆதரவு கொடுத்துட்டு, தற்போது நாங்கள் உங்கள் சமுதாய நண்பன் என்று வேடம் போட்டால் மக்கள் ஏற்பார்களா… இனி இலை எங்களுடன் கூட்டணி வைத்தாலும், வைக்கா விட்டாலும் நாங்கள் போட்டியிட்டு அவமானப்பட தயாராக இல்லை என்று நேரடியாகவே பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ வெளியில் தலைகாட்டாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் தாமரை மக்கள் பிரதிநிதி பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுவை காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரெயின்போ நகரில் உள்ள ரூ.50 கோடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பதிவாளர் உள்பட 15 பேரை கைது செய்தாங்க. இதன்பின் மீன்வளத்துறை இயக்குனர், நில அளவைத்துறை இயக்குனர் ஆகியோரையும் கைது செய்தாங்க. போலி பத்திரம் தயாரித்த இடத்தை பாஜ எம்.எல்.ஏ. முழம்குமார் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர், பல்வேறு சமூக அமைப்பினர் பலகட்ட போராட்டம் நடத்தினர். காமாட்சி அம்மன் கோயில் நில விவகாரத்தில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன், ரூ1 கோடி ரூபாயை கோயில் உண்டியலில் போடுவேன் என அறிவிப்பு வெளியிட்டார். கோயில் நிலங்களை இந்து அறநிலையத்துறையிடம் முழம்குமார் எம்எல்ஏ உள்பட அனைவரும் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் சமீபத்தில் தான் உத்தரவிட்டது.

இதையடுத்து புதுவை அரசு, நிலங்களை அளந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோயில் நில விவகாரத்தில் முழம்குமார் எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டை ஐகோர்ட் நிரூபித்து உள்ளது. எனவே அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ரூ.1 கோடியை கோயில் உண்டியலில் போடுவது எப்போது என அனைத்து கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் முழம்குமார் என்ன செய்வது என தெரியாமல், நொந்து வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post கூட்டணியில் இருந்து இலை விலகியதால் தாமரை நிர்வாகிகள் கட்சி தாவும் முடிவில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,Leaf ,wiki ,Yananda ,Union Woman ,Minister ,Lotus Party ,Uncle ,Peter ,Ili ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு தாமரை சின்னம்...