×

மாற்றத்தை தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 6,624 குறியீடுகள் அழிப்பு பாரதியார் மண்ணில் ‘சாதி ஒழிப்பு புரட்சி’: வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்

* தாமாகவே அடையாளங்களை அழிக்கும் மக்கள்

‘தீண்டாமை’ என்பது பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் நிலவும் சாபமாகும். இதை ஒழிக்க அன்றும் தலைவர்கள் போராடினார்கள். இன்றும் தலைவர்கள் போராடிதான் வருகின்றனர். உயர் சாதி பெருமையும், அதிகாரமும், செல்வமும்தான் ‘தீண்டாமை’யை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்க காரணம். அந்த காலத்தில் குடும்ப தொழிலை வைத்து உயர் சாதி, கீழ் சாதி பெருமை பேசப்பட்டது. வடமாநிலங்களில் இன்றளவும் சாதி வெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது உயர் சாதியினர் நடத்தும் தாக்குதல் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பெண்கள் மற்றும் ஆண்களை நிர்வாணமாக அழைத்து செல்வது, செருப்பை நக்க வைப்பது, ஊர் மக்கள் முன்னால் கட்டி வைத்து அடிப்பது போன்ற பல்வேறு கொடூர செயல்கள் தொடர்ந்து வருகிறது.

‘தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் கல்வி புரட்சி அவசியம்’. அனைவரும் கல்வி கற்றால் சாதி பெருமையை அழித்து சமூக நீதியை பின்பற்றும் சமூகத்தை உருவாக்கிவிடலாம். தமிழ்நாட்டில் சாதி பெருமை போக்க கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தலைவர்கள் போராடினார்கள். இதன் வெளிப்பாடு இன்று மூலை முடுக்கில் உள்ள அனைத்து கிராமத்திலும் இருக்கும் குழந்தைகள் கல்வி கற்க தொடங்கி விட்டனர். தலைவர்களின் சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி விழிப்புணர்வால் தமிழ்நாடு இன்று நாட்டிற்கே முன்னாடி மாநிலமாக பார்க்கப்படுகிறது. இங்கு சாதி மற்றும் மத மோதல்கள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துவத்துடன் அன்பை பரிமாறி கொள்கின்றனர். இதனால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக காட்சியளிக்கிறது.

இருந்தும் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் சாதி சண்டை, இரட்டை டம்ளர் முறை, கோயில்களுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பது போன்ற செயல்கள் தொடர்கிறது. இதை தடுக்க திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் குற்ற செயல்களை குறைத்ததற்காக தென் மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க்கை சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டியது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பல ஆண்டுகளாக கோயில்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகம் வழிபாடு செய்ய வைத்தது. சாதி ஒழிப்பு மாற்றும் சமூக நீதியை நிலைநாட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாதி மோதல்கள், தீண்டாமை உள்ளிட்டவை வெகுவாக குறைந்து உள்ளது. குறிப்பாக, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று கூறிய பாரதியார் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மாற்றத்தை தேடி’ என்ற எஸ்.பி பாலாஜி சரவணன் தொடங்கி வைத்த சமூக விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் 6,600 சாதி குறியீடுகள் அழிக்கப்பட்டு சாதி ஒழிப்பு புரட்சிக்கான விதை போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பொது இடங்களில் உள்ள மின்கம்பங்கள், நெடுஞ்சாலைத் துறை அடையாளப் பலகை (sign boards), மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அடிகுழாய், மின்மாற்றிகள், தரை பாலங்கள், குடிநீர் மோட்டார் மற்றும் பேருந்து நிறுத்தம் என பொது இடங்களில் எல்லாம் சாதி தொடர்புடைய வண்ணங்கள் பூசப்பட்டிருப்பதை பரவலாக காணமுடியும். அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் சாதியை சேர்ந்த மக்கள், இது தங்கள் பகுதி என்பதை உணர்த்தும் குறியீடாக இந்த வண்ணம் தீட்டுதலை செய்து வந்தனர். கடந்த 1995ம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பயங்கர சாதி கலவரத்துக்கு பிறகு தான் இவ்வாறு சாதிய வண்ணங்கள் பூசும் வழக்கம் பல பகுதிகளில் அதிகரித்தது. பொது இடங்களில் சாதி ரீதியிலான வண்ணங்கள் பூசி வைத்திருப்பதால், இளைஞர்களுக்கு ‘இது எங்க ஏரியா, அது உங்க ஏரியா’ என்ற பிரிவினை எண்ணம் தோன்றுகிறது.

இதனால் தென் மாவட்டங்களில் ஏற்படும் சாதிய மோதல்களால் முன்விரோதம் வளர்ந்து கொலையில் முடிந்து சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் மத்தியில் பதற்றம் உருவாகிறது. எனவே சாதி மோதல்களை தடுக்கவும், சட்டம், ஒழுங்கை பேணவும் பொதுமக்கள் மத்தியில் அமைதியான சூழ்நிலையை நிலை நாட்டவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக எஸ்பி பாலாஜி சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் ‘மாற்றத்தை தேடி’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின் கீழ், முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஏப்.22ம் தேதி வைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் தொடங்கப்பட்டது. கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், பாலியல் குற்றங்கள், அதற்கென இருக்கும் போக்சோ சட்டங்கள், குழந்தை திருமண தடை சட்டம், சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், இணையதள சைபர் குற்றங்கள் ஆகியவை குறித்து அந்தந்த காவல்நிலைய அதிகாரிகள், அவர்களது எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் சாதி ரீதியாக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவரும், அவரது சகோதரியும் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் காணப்படும் சாதி அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் மாவட்ட காவல் துறையினர் களமிறங்கினர்.

இதன் மூலம் மாற்றத்தை தேடி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடந்த 2 மாதங்களாக கிராமங்களில் பொது இடங்களில் உள்ள சாதி அடையாளங்களை காவல் துறையினர் முன்னிலையில் கிராம மக்கள் தாங்களே முன்வந்து அழித்து வருகின்றனர். எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் காவல் துறையினர் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பலனாக, மக்கள் தாங்களாகவே முன்வந்து மின் கம்பங்கள், மின் மாற்றிகள், குடிநீர் தொட்டி, தெரு பொது நல்லி, பஸ் ஸ்டாப், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள், பொது சுவர்களில் காணப்படும் சாதிய அடையாளங்கள், வர்ணங்களை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தினமும் காவல் துறையினர் முன்னிலையில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் வல்லநாடு, அம்பேத்கர் நகர், அனவரதநல்லூர், பரமன்குறிச்சி, ஆறுமுகநேரி, கந்தன்குடியிருப்பு, மூலக்கரை. ஆத்தூர், ராமச்சந்திராபுரம், குலசை, கோமனேரி, வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 79 சாதிய அடையாளங்களை அழித்தனர். இதன் விளைவாக மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல் துறையினர் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

எஸ்பி பாலாஜி சரவணன் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6 ஆயிரத்து 624 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் பொதுமக்களால் அழிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை தேடி நிகழ்ச்சிகள், சாதிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் போலீசார் பல்வேறு மோதல்களை தடுத்துள்ளனர்.

* 3,645 விழிப்புணர்வு கூட்டம் 1 லட்சம் பேர் உறுதிமொழி

சாதி மோதல்களை களைய தூத்துக்குடி மாவட்ட போலீசார் ஒரு முன்னுதாரணமாகவும், முன்னோடி திட்டமாகவும் இதை செயல்படுத்த துவங்கியுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் கூடும் பகுதிகளில் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்களை 3 ஆயிரத்து 645 இடங்களில் காவல் துறையினர் நடத்தியுள்ளனர். இவற்றின் மூலம் பொதுமக்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 114 பேரிடம், 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி பெறப்பட்டு மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும் முயற்சி தொடர்கிறது.

* கொலை குறைந்துள்ளது

எஸ்பி பாலாஜி சரவணன் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகவும் அன்பானவர்கள். சாதி, மதங்களை மறந்து உயிருக்கு உயிராக, நட்பாக, உறவாக பழகுபவர்கள். அவர்கள் மத்தியில் ஏற்படும் சிறு, சிறு கோபங்கள் தான் தாங்க முடியாத விளைவுகளை அவர்களுக்குள் ஏற்படுத்தி வருகிறது. இதனால் நல்ல நட்பு, உறவுகள் முறிந்து, பெரிய இழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. விளைவுகள் தெரியாமல் இதில் ஈடுபடுபவர்கள் மத்தியில் விளைவுகள் குறித்த பயம் மட்டுமே போதும். எவ்வித மோதலோ, சம்பவங்களோ இல்லாமல் போய்விடும். காவல்துறை என்றாலே மக்கள் மத்தியில் ஒரு எதிர்மறை எண்ணங்களே மேலோங்கி நிற்கின்ற நிலையில் தான் இந்த நிகழ்ச்சிகளை கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் துவங்கினோம். இதன் மூலம் காவல்துறைக்கும், மக்களுக்கும் உள்ள உறவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது, சமூக பொறுப்பு, சமூக அக்கறை, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் தங்களுக்கும் கடமை உண்டு என்று பொதுமக்களை எண்ண வைத்துவிடும் இந்த நிகழ்ச்சிகள். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சிகள் மூலம் முந்தைய ஆண்டுகளில் இருந்து 24 சதவீதம் கொலை சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்நிகழ்ச்சிகள் 90 சதவீத பகுதிகளில் நடத்தி முடித்து விட்டோம். இவை நல்ல விளவுகளை தந்துள்ளது.

தற்போதெல்லாம் போலீசார் சொல்வதற்கு முன் பொதுமக்கள் தாங்களாகவே இந்த சாதிய அடையாளங்களை அழித்து வருகின்றனர். இதுதவிர மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சமூக வலைதளங்களில் இதுபோன்ற சாதிய அடையாளங்களை அழிக்கவேண்டும். இதற்காக அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளும் தாங்களாகவே முன்வந்து களமிறங்கினால் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பிறந்த மண்ணில் அவரது வாக்கினை மெய்ப்பிக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிற்கும் உட்பட்ட கிராமங்கள், தாய் கிராமங்கள், குக்கிராமங்கள் பட்டியலை தயாரித்துள்ளோம். இதன் மூலம் மீதமுள்ள 10 சதவீத கிராமங்களிலும் சாதிய அடையாளங்கள் கிராம மக்கள் மூலமே முழுமையாக அழிக்கப்படும். இதைத்தொடர்ந்து மாற்றத்தை தேடி திட்டத்தின் பயன் என்னவென்பதை அலசி அடுத்த பயனுள்ள திட்டம் முன்னெடுக்கப்படும்’’ என்றார்.

* முன்மாதிரி கிராமங்கள்

கடந்த 1995ம் ஆண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த கலவரத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்காத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், ஆலந்தா, அக்கநாயக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஊர் நாட்டாமைகள், முக்கியஸ்தர்களை அழைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், சமூக நல்லிணக்கம் தொடர்பாக மாற்றத்தை தேடி கூட்டம் நடத்தினார். இதையடுத்து ஆகஸ்ட் 15ம் தேதி ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 73 மின்கம்பங்கள், 16 நெடுஞ்சாலைத் துறை அடையாளப் பலகை (sign boards), 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 4 அடிகுழாய், 2 மின்மாற்றிகள், 2 தரை பாலங்கள், குடிநீர் மோட்டார் மற்றும் பேருந்து நிறுத்தம் என 101 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை பொது மக்களே அழித்து ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினர்.

* 80 தெருக்களின் பெயர்களை மாற்ற கலெக்டர் தீர்மானம்

சாதிய அடையாளங்கள் இருப்பது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் அதன் தெருக்களின் பெயர்கள் சாதிய அடையாளங்களுடன் உள்ளன. இந்த சாதிய அடையாளங்களை நீக்கி சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள், மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தமிழின் தொன்மையையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பெயர்கள் அமைக்குமாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 9 யூனியன் பகுதிகளில் 80 தெருக்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த தெருக்களின் பெயர்கள் விரைவில் மாற்றப்படும்.

The post மாற்றத்தை தேடி’ என்ற திட்டத்தின் மூலம் 6,624 குறியீடுகள் அழிப்பு பாரதியார் மண்ணில் ‘சாதி ஒழிப்பு புரட்சி’: வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Caste Abolition Revolution ,Bharatiya ,Dinakaraan ,
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...