×

நடப்பாண்டின் 6 மாதங்களில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு ரூ.10.44 ஆயிரம் கோடி உதவி: குறைந்த வட்டியால் பயன்பெறும் மகளிர்; சராசரி கடன் ரூ.5.70 லட்சம்; அதிகாரிகள் தகவல்

* சிறப்பு செய்தி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடைய உதவிடும் வகையில், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது. இவ்வாண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார் ரூ.24,712 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24ம் நிதியாண்டில் ரூ.30,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவருக்கு சராசரி கடனாக ரூ.5.70 லட்சம் வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10,440 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.19,560 கோடி நிலுவையில் உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மகளிர் சுயஉதவிக்குழுகள் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் நேரடியாக பயன்பெறும் ஊரக மற்றும் நகர்ப்புற குழுக்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களால் ஆரம்பிக்கப்பட்ட குழுக்கள் என என்னெற்ற மகளிர் சுய உதவிக்குழுகள் உள்ளன. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் 3 கோடி குழுக்களும், நகர்புற பகுதியில் 1.30 கோடி என மொத்தம் 4.30 கோடி குழுக்கள் உள்ளன. இதே அளவிற்கு அரசுசாரா நிறுவனங்களிலும் குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு கடன் வழங்கவே, ரூ.30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு குழுவானது கடனை பெற்று முழுமையாக திருப்பி செலுத்தும்போது 7% அதிகமாக எவ்வளவு சதவீத வட்டி செலுத்தப்படுகிறதோ, அந்த வட்டி தொகையை மானியமாக அந்த குழுவிற்கே திருப்பி வழங்கப்படுகிறது. இது கடனை திருப்பி அடைத்த பிறகு, வட்டி தொகை திரும்ப வழங்கப்படுகிறது.

மேலும் சில வங்கிகளுடன் இணைந்து சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இரண்டாவது தவணையாக ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் கடன் என அடுத்தத்தடுத்த தவணைக்கு கடன் பெறும் தொகையானது கூடிக்கொண்டே போகக்கூடும். இதில் வட்டி சதவீதமானது மிகவும் குறைவு. அதேபோல் சுய உதவிக்குழுக்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு தொகையிலிருந்து 6 முதல் 8 மடங்கு தொகை மட்டுமே முதல் தவணையாக வழங்க வேண்டும் என ஆர்பிஐ வழிக்காட்டு நெறிமுறைகளில் வழங்கப்பட்டுள்ளது.

அதனை பின்பற்றியே வங்கிகளும் கடன் வழங்கி வருகிறது. சுய உதவிக் குழு தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி சந்தை என்ற இணையவழி விற்பனை தளம் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை அவர்களுக்குள்ளாகவும் பிற பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நடத்தப்படும். மேலும் இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன் கூறுகையில் : சென்னையில் 15 முதல் 30 சுய உதவிக்குழுக்கள் சேர்ந்து ஒரு குழு உருவாக்கப்படுகிறது. இதுபோல் சென்னையில் 287 குழுக்கள் உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஊரக மற்றும் நகர்புற குழு உள்ளது. இதனால் இதர மாவட்டங்களில் பெரிய தொகைகள் வழங்கப்படுகிறது. இதனிடையே கடந்த வருடம் மட்டுமே 5 குழுக்களுக்கு பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த நிதியாண்டில் 50க்கும் மேற்பட்ட பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் 2,761 குழுவிற்கு ரூ.99.6 கோடியும், 2022-23ம் ஆண்டில் 5670 குழுவிற்கு ரூ.252 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடத்திற்கு 10,000 குழுக்களுக்கு கடன் வழங்க இலங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கூறுகையில் : முதல் தவணையாக ரூ.1.5 லட்சம் வழங்கும்போது குழுவில் 15 நபர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். அவ்வாறாக பிரிக்கும்போது ரூ.10000 அல்லது ரூ.15000 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை என்றொல் அடுத்த வங்கியில் அதிக வட்டியில் கடன் பெறும் நிலை ஏற்படுகிறது. 19 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. எனவே, இதில் வழங்கப்படும் முதல் தவணையின் தொகையை அதிகரித்து வழங்கப்படும்போது மகளிர் முழுமையாக கடனிலிருந்து வெளியேற முடியும். எனவே, முதல் தவணையை அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மற்ற மாநிலங்களை போல சுய உதவிக்குழுக்களுக்கு பொருட்களை வழங்கி அதனை உற்பத்தி செய்து மற்ற குழுக்களுக்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் சுயஉதவிக்குழுவினர் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.

2023-24ம் ஆண்டின்
சுயஉதவிக் குழுக்களின் கடன் இணைப்பு
இலக்கு 30,000 கோடி 100%
வழங்கப்பட்டவை 10,440 கோடி 35%
நிலுவை 19,550 கோடி 65%

கவனம் செலுத்த
வேண்டிய மாவட்டங்களின் விவரங்கள் 6
மாதங்களில் வழங்கப்பட்ட
சதவீதம்
தென்காசி 27%
அரியலூர் 28%
திருப்பத்தூர் 30%
பெரம்பலூர் 30%
மதுரை 30%

*சராசரி கடன் (லட்சத்தில்)
செங்கல்பட்டு ரூ.3.2
லட்சம்
திருப்பூர் ரூ.3.5
லட்சம்
பெரம்பலூர் ரூ.3.6
லட்சம்
திருநெல்வேலி ரூ.4.2
லட்சம்
கரூர் ரூ.4.7
லட்சம்

ஏப்ரல் முதல் செப்டம்பர் 15ம் தேதி வரையிலான விவரங்கள் (சென்னை மாவட்டம்)
கடந்த 6 மாத விவரங்கள் சுய உதவிக்குழுக்கள் வழங்கப்பட்ட கடன்(லட்சம்)
அரசு சுயஉதவிக்குழுக்கள் 3849 21361.42
அரசு சாரா நிறுவன சுயஉதவிக்குழுகள் 7306 34403.71

The post நடப்பாண்டின் 6 மாதங்களில் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு ரூ.10.44 ஆயிரம் கோடி உதவி: குறைந்த வட்டியால் பயன்பெறும் மகளிர்; சராசரி கடன் ரூ.5.70 லட்சம்; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Special News ,Tamil Nadu Women Development Institute ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...